cm edappadi answered vishal for his statement over rk nagar election process
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்பு மனு பல இழுபறிகளுக்குப் பின் நிராகரிக்கப் பட்டது.
இதை அடுத்து, பொங்கித் தீர்த்தார் விஷால். ஏதோ நாடகம் நடக்கிறது என்றார். வேண்டுமென்றே என் வேட்புமனுவை திட்டமிட்டு நிராகரித்து விட்டார்கள் என்றார். பின்னர், சரி என்னை நிராகரித்து விட்டார்கள் ஆனால், நான் இங்குள்ள ஒரு இளைஞர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, அவரை வெற்றி பெறச் செய்வேன் என்று சபதம் எல்லாம் போட்டார்.
பிறகு இன்று காலையில், பிரதமருக்கு டேக் செய்து, டுவிட்டரில் முறையிட்டார். ஜனாதிபதி மாளிகைக்கு இந்த விவகாரம் தெரிய வேண்டும் என்று மேலிடத்துக்கே போய் விரலை விட்டு ஆட்டுவதாய்க் கணக்கு செய்து கொண்டு டிவிட்டர் புகுந்து விளையாடினார்.
பின்னர் ஆளுநர் மாளிகையில் அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கூறினார். இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையர் லக்கானியை சந்தித்தார். தன் தரப்பு நியாயத்தைக் கொட்டித் தீர்த்தார்.
ஆனால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு பதிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரான ராஜேஷ் லக்கானியை சந்தித்து அளித்தார் விஷால். அதில் பெறுநர் விவரத்தில் தலைமை தேர்தல் அதிகாரி என்பதற்கு பதிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் என குறிப்பிட்டிருந்தார். இப்படி எத்தனை எத்தனை முதிர்ச்சியற்ற தன்மை..!
இப்படி எல்லாம் இந்த ஒரு இடைத் தேர்தலுக்கு முட்டி மோதும் விஷாலுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூலாக ஒரு பதில் கொடுத்துள்ளார். அதாவது, முறையான வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தால் தேர்தல் ஆணையம் யாரையும் நிராகரிக்காது என்பதுதான் விஷாலுக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பதில்!
எதற்கும், விஷால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களின் போது என்ன நடந்தது என்பதை எல்லாம் டியூஷன் வைத்து யாரிடமாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும்தான்!
