வரும் 7ம் தேதி அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலவ்ர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், வருகிற 7-ம் தேதி (முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2 தினங்களாக தேனியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று ட்வீட் செய்திருந்தார். மேலும், இன்று மாலை சென்னை திரும்புவதாகவும் ஓபிஎஸ் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.