christy comany deposited 250 crore in bank on 2016

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு முட்டை மற்றும் சத்துமாவு சப்ளை செய்யும் நிறுவனமான திருச்செங்கோட்டைச் சேர்ந்த கிருஷ்டி நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதே கணக்கில் வராத 250 கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகளை, திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஷ்டி பிரைடு கிராம் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் சத்துணவு முட்டை வினியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் வீடு, இந்த தனியார் நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்கும் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த ஆடிட்டர் ராமச்சந்திரனின் வீடு ஆகிய இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த நிலையில் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள கிருஷ்டி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினரின் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனத்தில் இருந்து 17 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 10 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்று 5 வது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தியதில் கடந்த 2016-ல் கிறிஸ்டி நிறுவன உரிமையானர் குமாரசாமி கூட்டுறவு வங்கி கணக்கில் 250 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதை வருமானவரித்துறையினர் சோதனையில் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக குமாரசாமி அவரது மகள்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெறுகிறது.