சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவராக ஹெச்.ராஜாவை தேர்வு செய்வது பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது போன்றது எனவும், தமிழக அரசு இதை அனுமதிக்க கூடாது எனவும் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி சாரண சாரணியர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை சேர்ந்த தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சாரணர், சாரணியர் இயக்கத்தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசு ஹெச்.ராஜாவை நியமிக்கும் செய்தி நடுநிலையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாணவர் உள்ளத்தில் நஞ்சை விதைக்க திரைமறைவில் முயற்சி நடக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.  

இதைதொடர்ந்து செய்தியாளரகளை சந்தித்த ஹெச்.ராஜா, தன்னை போட்டியிடக்கூடாது என கூற ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனவும், சாரணர் இயக்கத்தை சேர்ந்த யார்  வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் எனவும் தெரிவித்தார். 

மேலும், சாரணர் சாரணியர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தன்னை கேட்டு கொண்டதாலேயே தேர்தலில் போட்டியிட உள்ளேன் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவராக ஹெச்.ராஜாவை தேர்வு செய்வது பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது போன்றது எனவும், தமிழக அரசு இதை அனுமதிக்க கூடாது எனவும் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.