சட்டசபையில் எனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு யாரையும் புகழ்ந்து பேசக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறேன் , ஆனால் சட்டசபையில் சின்னம்மா , குட்டிம்மா என புகழ்பாடப்படுகிறது. என்ன செய்ய நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம் என மு.க.ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்தார்.


சட்டசபையில் பட்டுப்போய் விட்டது என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக அவைக்குறிப்பிலிருந்து அந்த வார்த்தையை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.


நேற்றைய தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீது நடைபெறக்கூடிய விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்று உரையாற்றி இருக்கிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரை நல்ல பொறுப்புள்ள நிர்வாகம் அந்நியப்பட்டு போய் ஆண்டுகள் பல ஆகி விட்டன’ என்பது. அதாவது ’பட்டுப்போய்’ என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக்கூடாது, அது அவையில் பயன்படுத்தக் கூடாதது என்ற நிலையில், அதனை நீக்கினார்கள். 


இதற்கு நாங்கள் கடுமையான ஆட்சேபணை தெரிவித்தோம். உடனே அதற்கு சபாநாயகர் ’பட்டுப்போய்’ என்ற வார்த்தையை நீக்குகிறோம், அதேபோல அமைச்சர் என்னை ’விஷத்தை கக்குகிறார்’ என்று சொன்ன சொல்லையும் நீக்குகிறோம் என்று தீர்ப்பளித்தார்.


பட்டுப்போய்’ என்ற வார்த்தை சட்டப்பேரவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தையல்ல, எனவே அது இருப்பதில் தவறில்லை, எனவே அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருக்க வேண்டும், என்று நேரமில்லா நேரத்தில் நான் வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டேன்.


அதுமட்டுமல்ல, இதே சட்டப்பேரவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே அவையில், இதைவிட மோசமாக பேசியிருக்கிறார். 


அம்மையார் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசுகிறபோது, ‘திமுக அரசு தமிழ்நாட்டை அதாள பாதாளத்திற்கு அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது’ என்று சொல்லி, அது அவைக்குறிப்பிலும் இருக்கிறது. இதையும் நான் அவையில் படித்துக் காட்டினேன்.


சபாநாயகர் கேட்க வில்லை. ‘நான் அளித்த தீர்ப்பு, இறுதி தீர்ப்பு’ என்று சொல்லிவிட்டார். ஆகவே, எங்கள் கண்டனத்தை இதற்கு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.


அதுமட்டுமல்ல, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., இதே அவையில், ‘சட்டமன்றம் செத்து விட்டது’, என்றார். ’ஆட்சியல்ல, நிர்வாகமல்ல, சட்டமன்றமே செத்து விட்டது என்று அவர் சொன்னது இன்றும் அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. ஆக, அதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ’பட்டுப்போய்’ என்று சொல்வது சாதாரண விஷயம் தான்.


 நாங்கள் எங்களுடைய சட்டமன்ற ஜனநாயக கடமை மற்றும் மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய மரபில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். கேள்வி நேரத்தின்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவது, சசிகலாவை புகழ்ந்து பேசுவது, சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா, என்றெல்லாம் பேசுவது ஆகியவைதான் சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது. 


எங்களுடைய கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை எல்லாம் நான் கண்டிப்போடு கூறி இருக்கிறேன், ’கேள்வி நேரத்தில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் யாரையும் புகழ்ந்து பேசக்கூடாது, பிரச்னைகளை மட்டும் தான் பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கின்றேன். 


பலமுறை இதை நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்த சபை அப்படி நடைபெறவில்லை. இருந்தாலும், எங்களைப் பொறுத்தவரையில், எங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்ற நாங்கள் மீண்டும் சபைக்கு செல்கிறோம். என்று வேதனையுடன் தெரிவித்துவிட்டு சென்றார்.