இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்த ஆன்லைன் செயலி கந்து வட்டி நிறுவனங்களை நடத்திய சீனர்கள் இருவர் உள்ளிட்ட 4 பேரை சென்னை காவல்துறை கைது செய்திருக்கிறது. ஆன்லைன் செயலி கந்து வட்டி நிறுவனங்களின் பின்னணி தொடர்பாக வெளியாகியுள்ள முதல்கட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாகவும், அச்சமூட்டுபவையாகவும் உள்ளன.
மிகவும் எளிய முறையில் எந்தவித ஆவணங்களும் இன்றி கடன் வழங்குவதாகக் கூறி ஏராளமான ஆன்லைன் கந்துவட்டி செயலிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த செயலிகள் மூலம் கடன் வாங்கி, அதை குறித்த காலத்தில் செலுத்தத் தவறியவர்கள் அவமானத்திற்கும், மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்தும், இதற்கு காரணமான செயலிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆன்லைன் செயலி கந்துவட்டி   நிறுவனங்களிடம் கடன் பெற்ற இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து முதன்முதலில் கடந்த நவம்பர் 27ம் தேதி நான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, கந்துவட்டி செயலிகள் குறித்து எச்சரிக்கையையும், விழிப்புணர்வு செய்திகளையும் வெளியிட்ட சென்னை மாநகர காவல்துறை, இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது.
தீவிர விசாரணைக்குப் பிறகு பெங்களூர் நகரில் செயல்பட்டு வந்த ஆன்லைன் செயலி கந்துவட்டி நிறுவனங்களின் பின்புல அலுவலகத்தை முடக்கிய காவல்துறையினர், அதை நடத்தி வந்த  ஜியா மாவ், யுவான் லுன் ஆகிய இரு சீனர்களை கைது செய்துள்ளனர். ஹாங், வான்டிஷ் ஆகிய இரு சீனர்கள் சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் தவிர ஆன்லைன் கந்துவட்டி தொழிலுக்கு துணையாக இருந்த இருவரையும் கைது செய்துள்ளனர். சரியான நேரத்தில், சரியான திசையில் விசாரணை மேற்கொண்டு ஆன்லைன் கந்துவட்டி கும்பலை கைது செய்துள்ள சென்னைக் காவல்துறைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
அதேநேரத்தில் இந்த விஷயத்தில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள உண்மைகளும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் ஆழ்கடலில் மூழ்கி, ஓரளவு மட்டும் வெளியில் தெரியும் பனிப்பாறையின் முனைக்கு சமமானவைதான். ஆன்லைன் கந்துவட்டி குறித்த முழு உண்மைகளும் வெளியில் வரும் போது அது மிக மோசமான அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவில் இப்போது செயல்பாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கந்துவட்டி செயலிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரூ.300 கோடிக்கும் கூடுதலான தொகை கந்துவட்டிக்கு விடப்பட்டிருப்பதும், இவற்றில் பெரும்பான்மையான செயலிகளை ஒரே நிறுவனம் பல்வேறு பெயர்களில் நடத்துவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை முதற்கட்ட செய்திகள்தான். இவற்றை விட பல மடங்கு  செயலிகள் பயன்பாட்டில் இருக்கவும்,  பல மடங்கு தொகை கந்துவட்டிக்கு விடப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. 
கந்துவட்டிக்கு விடப்படும் தொகை பெரும்பாலும் தனியார் வணிக வங்கிகளில்  தொடங்கப்பட்டுள்ள கணக்குகளில் இருந்து தான் தனிநபர்களுக்கு அனுப்பப்படுகின்றன; அவர்களிடம் இருந்து பெறப்படும் தொகையும் இந்தக் கணக்குகளில்தான் வரவு வைக்கப்படுகின்றன. தனிநபர் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கே ஏராளமான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நிலையில், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், எந்தவித அனுமதியும், உரிமமும் பெறாமல் சீன நிறுவனங்களால் ரூ.300 கோடிக்கும் கூடுதலான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தி வட்டிக்கு விட்டு வாங்க எப்படி முடிகிறது?
இந்தியாவில் வங்கியில்லா நிதிநிறுவனங்களை நடத்துவதற்காக கடந்த காலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்ட உரிமங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாகவும், அவற்றை சீன  நிறுவனங்கள் பெயர் மாற்றம் செய்யாமல் பினாமி பெயர்களில் வாங்கி, அவற்றின் மூலமாக ஆன்லைன் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பயன்பாட்டில் இல்லாத வங்கியில்லாத நிதிநிறுவனங்களின் உரிமங்கள் திடீரென செயல்பாட்டுக்கு வந்திருப்பதை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே  கண்டுபிடித்திருந்தால் டிஜிட்டல் கந்துவட்டியை முன்பே தடுத்து இருந்திருக்க முடியும். ஆனால், இன்று வரை ஆன்லைன் கந்துவட்டி செயலிகள் தடை செய்யப்படவில்லை. மாறாக கந்துவட்டி செயலிகளை பொதுமக்கள் தரவிறக்கம் செய்ய வேண்டாம்; அவற்றின் வாயிலாக கடன் பெற வேண்டாம் என்று மட்டுமே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. செயலிகளை தடை செய்வதற்கு என்ன தயக்கம்?
பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், கென்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இத்தகைய கந்துவட்டி செயலிகள் குறித்து புகார் எழுந்ததையடுத்து அவை தடை செய்யப்பட்டன. அவற்றை நடத்தி வந்த சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் இன்று வரை கந்து வட்டி செயலிகள் தடை செய்யப்படாதது ஏன்? எனத் தெரியவில்லை. டிஜிட்டல் கந்துவட்டி நிறுவனங்கள் தனிநபர்களைத் தற்கொலைக்கு தூண்டுவதுடன் மட்டும் பிரச்சினை நின்றுவிடுவதில்லை. கந்துவட்டி செயலிகள் மூலம் தனிநபர்கள் குறித்த அனைத்து தகவல்களும் திருடப்படுகின்றன. இது ஒரு கட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையலாம். இதே காரணத்தைக் கூறி தான் 267 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருக்கிறது. இத்தகைய சூழலில் அவற்றை விட மோசமான கந்துவட்டி செயலிகளை அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இந்தியாவில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்; கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக டிஜிட்டல் கந்துவட்டி நிறுவனங்களின் பின்னணி, நோக்கம், அவற்றுக்கு துணையாக இருப்பவர்கள் குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.