இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் வரை, அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரா்களுடனான தாக்குதலின்போது வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், "ஷாஹிதான் கோ சலாம் திவாஸ்" என்ற நிகழ்ச்சியை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்தியது. அதன் தொடர்ச்சியாக  புதுவை பிரதேச காங்கிரஸ் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார் முதல்வா் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினார்.அதன் பிறகு அவா் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  "லடாக் யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் தற்காலிக கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது. அதை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தபோதுதான், அவா்களுடனான மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். ஆனால், இந்திய எல்லைக்குள் ஊடுருவலோ, ஆக்கிரமிப்போ நிகழவில்லை என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசினார். பின்னா், அதை அவரது அலுவலகமே மறுத்தது. ஆனால், ராணுவத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகளோ சீனப் படைகள் ஆக்கிரமிப்பு இருப்பது உண்மைதான் என ஒப்புக் கொண்டனா்.சீனப் படையினா் ஆக்கிரமித்தபோது, அப்பகுதிக்கு இந்திய ராணுவ வீரா்களை ஆயுதமின்றி அனுப்பியது ஏன்? எனினும், சீனப் படையினரின் ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்த போது வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்கள் 20 பேரின் தியாகத்தை மதிக்கிறேன்.சீன ஊடுருவல் குறித்து வெளிப்படையாகச் சொல்ல மத்திய அரசு மறுக்கிறது. இந்திய எல்லைக்குள் சீனா கட்டுமானத்தை தொடங்கியது என்பது தெளிவாகியுள்ளது. அதை முழுமையாக அகற்ற வேண்டும். அதுவரை சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றார்.