சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்பு நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த தமிழர்களின் பாரம்பரிய கலை இசை நடனங்கள் ஒவ்வொன்றையும் அவர் நின்று  கண்டு ரசித்தார்.

பிரதமர் மோடி மற்றும்  சீனா அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. அதற்காக இன்று  பகல் 1 மணிக்கு சீன அதிபர் சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். அப்போது அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்க கலை குழுக்கள் தயாராக நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. திட்டமிட்டபடி சென்னையில் கால்வைத்த சீன அதிபரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

 

அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  பாரம்பரிய கலை குழுக்களின்  மயிலாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கலைஞர்கள்  விண்ணதிர இசைத்து  பாரம்பரிய  நடனமாடி சீன அதிபரை வரவேற்றனர். தமிழரின் பாரம்பரிய கலை இசை நடனத்தை பார்த்த சீன அதிபர் மெய் சிரித்து நின்றார்,  ஒவ்வொரு நடனத்தையும் கண்ட அவர் அவற்றை கடந்து  செல்ல மனமின்றி சிறிது நேரம் நின்று  ரசித்தார். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டும் விதமாக  கையை அசைத்து உற்சாகப்படுத்தினார்.  பிறகு தனக்கென நிறுத்திவைக்கப்பட்டிருந்த  சொகுசு காரில் ஏறி கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு  புறப்பட்டார்