விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக செயல்படும் ஜெண்டில் மேன் தலைமைச் செயலாளர் சண்முகம் அவரது மனதை திமுக புண்படுத்திவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  

சென்னை பட்டினம்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-கோயம்பேடு சந்தை அதிகமானோர் கூடும் இடமாக இருப்பதால், அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூட்டங்களில் வலியுறுத்தியபோது வியாபாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கோயம்பேடு சந்தையில் தொற்று பரவ ஆரம்பித்தவுடன் கடந்த 5-ம் தேதி வியாபாரிகள் சம்மதத்துடன் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது.  

இதையடுத்து கடந்த 10-ம் தேதி திருமழிசையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 நாட்களில் எடுத்த முடிவு புயல் வேகத்தில் செயல்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும். திமுக போன்று எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது என்றார்.

மேலும் பேசிய அவர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக செயல்படும் ஜெண்டில் மேன் தலைமைச் செயலாளர் சண்முகம் மனதை திமுக புண்படுத்திவிட்டது. மோதுவதாக இருந்தால் தமிழக அரசுடன் மட்டுமே மோத வேண்டும் என்றும், அதிகாரிகளை மிரட்டும் செயலில் திமுக ஈடுபடக்கூடாது என்றும் கூறினார்.

அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் செயலில் திமுக திட்டமிட்டு சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் தயாநிதி மாறன் பேசி உள்ளதாகவும், தயாநிதி மாறனின் செயலை திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கண்டித்துள்ளார் என்று கூறினார்.