தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு அடுத்த வருடம் 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு  ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், கடந்த ஜூலை 1-ம் தேதியன்று புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றுக்கொண்டார். நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டதால், இவரை விட 6  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் இருந்தும், தலைமை செயலாளர் வாய்ப்பு சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.

ஆனால், அவரது பணிக்காலம் வரும் ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் புதிய அதிகாரியை நியமிப்பதற்குப் பதிலாகச் சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு  பரிந்துரை ஒன்றை அனுப்பி இருந்தது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு, ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, தமிழக அரசின் தலைமைச்  செயலாளராக கே.சண்முகம் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு அடுத்த வருடம் 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 6 மாதங்கள்  சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 1985ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி இந்திய ஆட்சிப்  பணியில் சேர்ந்தார். சண்முகம் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்.