அக்டோபர் 7ந் தேதி அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் செயற்குழுவில் நடைபெற்ற விஷயங்களை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

செயற்குழு கூட்டத்தில் ஆதரவை காட்ட ஓபிஎஸ் – இபிஎஸ் இருவருமே பெரு முயற்சி செய்தனர். இதில் ஓபிஎஸ் தனக்கு செயற்குழுவில் எதிர்பார்த்த அளவிற்கு ஆதரவு இருக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டார். இதனை அடுத்தே செயற்குழு நடைபெறும் இடத்திற்கு அருகேயும், தனது வீட்டிற்கு அருகேயும் தனது ஆதரவாளர்களை அதிக அளவில் ஓபிஎஸ் தரப்பு திரட்டியிருந்தது. மேலும் செயற்குழு நடைபெற்ற அதிமுக தலைமையகம் அருகே ஓபிஎஸ் முகமூடியுடன் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.

ஓபிஎஸ் செயற்குழுவிற்கு புறப்படும் முன்பு ஜெயலலிதா பாணியில் பல்வேறு கோவில்களில் இருந்து பூஜை செய்து கொண்டுவரப்பட்ட பிரசாதங்களுடன் அர்ச்சகர்கள் காத்திருந்தனர். அத்தோடு அவரது வீட்டருகே திரண்டிருந்த ஆதரவாளர்கள் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர், ஜெயலலிதாவின் வாரிசு என முழக்கங்களை எழுப்பினர். அதோடு மட்டும் அல்லாமல் வீட்டில் இருந்து கட்சி தலைமையகம் செல்லும் வரை வழியில் ஆங்காங்கே ஆதரவாளர்களை நிறுத்தி ஓபிஎஸ்க்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆளுயர மாலை மற்றும் வீர வாள் பரிசளிக்க ஆதரவாளர்கள் நின்று கொண்டிருந்த நிலையில் காரில் இருந்து இறங்கி அதனை ஓபிஎஸ் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தொண்டர்கள் புடை சூழ செயற்குழு நடைபெறும் அதிமுக தலைமையகத்திற்குள் சென்றார் ஓபிஎஸ். இத்தோடு ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு நிறைவு பெற்றது. கட்சி அலுவலகத்திற்குள் சென்ற அவரிடம் சம்பிரதாயத்திற்கு சிலர் வரவேற்று பேசினர். பெரும்பாலானவர்கள் ஓபிஎஸ் வருவது தெரிந்தும் தெரியாதது போல் அமர்ந்திருந்தனர்.

அதே சமயம் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து எந்த ஆரவாரமும் இல்லாமல் புறப்பட்டார். கட்சி அலுவலகம் வந்த பிறகு தான் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து முழக்கங்களுடன் வரவேற்பு அளித்தனர். ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழங்கியது போல் ஆளுயர மாலை, வீர வாள், முகமூடி போன்ற வரவேற்புகள் எடப்பாடிக்கு கிடைக்கவில்லை. ஆனால் செயற்குழு நடைபெற்ற அரங்கில் எடப்பாடி பழனிசாமி நுழைந்ததும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான முழக்கங்கள்  நிற்க சில நிமிடங்கள் பிடித்தன. கூட்டம் தொடங்கியதுமே 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசினார். தேர்தல் நெருங்குவதால் உடனடியாக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றுஅ வர் வலியுறுத்தினார். அடுத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தங்கமணியோ, இன்றைய செயற்குழுவிலேயே முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று அதிரடி காட்டினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தால் தான் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என்று தெரிவித்தார். இப்படி அமைச்சர்கள் ஒவ்வொரு முறை எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறும் போதும் செயற்குழு கூட்டம் நடைபெற்ற அரங்கம் ஆதரவு கோஷங்களால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவி சண்முகம், திமுகவை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமியால் தான் முடியும் என்று அறிவித்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த செயற்குழு உறுப்பினர் ஒருவர் பேசும் போது, ஓபிஎஸ் தான் ஜெயலலிதாவின் வாரிசு அவரைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.

அப்போது அரங்கிற்குள் இருந்து ஒரு சிலர் துரோகிகள் என்று முழங்கினர். திமுகவோடு சேர்ந்து அம்மா அரசை கவிழ்க்க முயன்றவர் ஓபிஎஸ் என்றும் சப்தம் எழுப்பினர். இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது எழுந்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ், 2021ம் ஆண்டு வரை மட்டுமே முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றே தான் உங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறினார். எனவே 2021 தேர்தலில் புதிய வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அப்போது, அமைச்சர்கள் சிலர் அது என்ன வியூகம் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறி ஏதோ சொல்ல முயல உடனடியாக எழுந்த எடப்பாடி பழனிசாமி உங்களையும் முதலமைச்சர் ஆக்கியவர் சசிகலா தான் என்று பதிலடி கொடுத்தார். அத்தோடு மட்டும் இல்லலாமல் நம்மை யார் முதலமைச்சராக்கியது என்பது தற்போது முக்கியம் இல்லை, யார் நல்லாட்சி கொடுத்தது என்பது தான் முக்கியம். எனது தலைமையிலான ஆட்சியில் என்ன குறை கண்டீர்கள், பிரதமரே என்னை சிறப்பாக ஆட்சி செய்வதாக பாராட்டியுள்ளார்.

எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன் என்று எடப்பாடி கூறினார். அதற்கு ஓபிஎஸ்சிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதே சமயம் முதலமைச்சர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழ ஆரம்பித்தன. எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் முழக்கங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்தே அக்டோபர் 7ந் தேதி முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செயற்குழு ஒட்டு மொத்தமாக எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தது என்றே கூறலாம். இதனால் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் இந்த பத்து நாட்களில் ஓபிஎஸ் கட்சியில் தனது பிடியை இறுக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார் என்கிறார்கள். அதனால் தான் நல்ல நாள் பார்த்து முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கலாம் என்று ஓபிஎஸ் ஒப்புக் கொண்டதாக கூறுகிறார்கள். அந்த வகையில் அக்டோபர் 7 புதன்கிழமை அன்று முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்பட உள்ளார்.