ஓபிஎஸ் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எங்குமே கேட்கவில்லை என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார்கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.

சென்னையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வரும் 7ந் தேதி தலைமை கழகம் முறைப்படி முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அவர் பதில் அளித்தார். அதோடு மட்டும் அல்லாமல் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கும் 7ந் தேதி விடை கிடைக்கும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பது குறித்தும் அவர் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்று விரும்புகிறாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறியது யார்? என்று பதில் கேள்வி எழுப்பினார் உதயகுமார். அத்துடன், முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்று ஓபிஎஸ் யாரிடம் கூறினார் என்றும் உதயகுமார் வினவினார். செயற்குழுவிலும் சரி உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் சரி தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் எந்த இடத்திலும் பேசவில்லை என்றும் உதயகுமார் தெரிவித்தார். முதலமைச்சர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று ஓபிஎஸ்சே பேசாத நிலையில் நீங்கள் ஏன் அதைப்பற்றி எல்லாம் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று உதயகுமார் சீறினார்.

செயற்குழுவிற்கு பிறகு முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாருமே பேசத் தயங்கி வருகின்றனர். ஏன் ஜெயக்குமார் கூட 7ந் தேதி வரை பொறுமையாக இருங்கள் என்று தான் கூறி வருகிறார். ஆனால், ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக விரும்பவில்லை என்று உதயகுமார் தடாலடியாக கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் போட்டியில் இருக்கும் ஒரே நபர் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடமும் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பில் அதிமுகவில் குழப்பம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீனிவாசன், அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை, அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம், மக்கள் நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறோம், மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என்று அதிரடியாக அறிவித்தார். அதாவது முதலமைச்சர் வேட்பாளர் குறித்து யாரும் எதுவும் பேசக்கூடாது என்று ஏற்கனவே அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஆனால் திண்டுக்கல் சீனிவாசனோ அடுத்த முதலமைச்சர் எடப்பாடியார் தான் என்று அறிவித்துள்ளது அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

அமைச்சர்கள் உதயகுமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் இருவருமே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள். இருவருமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை கூறியுள்ளனர். ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்று கூறவில்லை என உதயகுமாரும், எடப்பாடி தான் அடுத்த முதலமைச்சர் என்று சீனிவாசன் கூறியிருப்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் போட்டியில் யாரும் இல்லை என்று கூறுகிறார், மற்றொருவர் எடப்பாடியார் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார். இந்த அளவிற்கு துணிச்சலாக அமைச்சர்கள் இருவரும் பேட்டி கொடுத்திருப்பது எடப்பாடியாரின் கவனத்திற்கு செல்லாமல் இருந்திருக்காது என்கிறார்கள்.

மேலும் அக்டோபர் 7ல் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு என்று முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பேசச் சென்றால் ஓபிஎஸ் சரியாக பதில் அளிப்பதில்லை என்கிறார்கள். இதனால் தான் எடப்பாடியார் தனது ஆதரவு அமைச்சர்களை வைத்து தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக கூற வைத்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதாவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடி தரப்பு இறங்கி அடித்திருப்பது ஓபிஎஸ் தரப்பை கதிகலங்க வைத்துள்ளது. இதனால் தான் நேற்று பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர், அடுத்த முதலமைச்சர் எடப்பாடியார்என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது தவறு என்று கூறியுள்ளார்.