முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை, அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கூட்டம், டிடிவி.தினரகன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலின் எதிரொலியா என கேள்வி எழுந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு, கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து நிர்வாகிகளுக்கும் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி டிடிவி.தினகரன், புதிய அதிமுக நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார். இதற்கு எடப்பாடி தலைமையிலான அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், டிடிவி.தினகரன் அறிவித்த கட்சி பொறுப்பு செல்லாதவை எனவும் கூறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், அதிமுக தலைமை செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, நாளை காலை ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் மீனவர் அணி, மருத்துவர் அணி, விவசாயிகள் அணி, வழக்களிஞர்கள் அணி என அனைத்து தரப்பு அணியின் நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில், டிடிவி.தினகரன் அறிவித்துள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தேகமே என டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கூறுகின்றனர். மேலும், இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, எவ்வளவு நேரம் நடக்கும் என்பது தெரியவில்லை.