டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள அதிமுக சட்மன்ற உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்றார். 

தங்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு தங்களை அழைத்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்னும் இரண்டு நாட்களில் தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், அப்படி அழைக்காதபட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நீட் தேர்வின் பாதிப்பினால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏன் கலந்து கொள்ளவில்லை எனவும் எம்.எல்.ஏ. தங்க
தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்.

மாநில பாடத்திட்டத்தின்கீழ் நீட் தேர்வு கேள்விகளை கேட்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை என்றும், நீட் தொடர்பாக திமுக நடத்தும் போராட்டம் அரசியல் ஆதாயத்திற்கானது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.