ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல எனவும் அனைத்து மதத்திற்கும் தமிழகத்தில் சம உரிமை உண்டு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் விளக்கம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. கேரளாவைக் கடந்து தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தின் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்துள்ளது. 

அயோத்தியில் தொடங்கி, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் வரும் 25ம் தேதி நிறைவு பெறுகிறது. மதநல்லிணக்கத்தை காக்கும் வகையில் இந்த ரதயாத்திரையை அனுமதிக்க கூடாது என எஸ்டிபிஐ, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆகிய அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகிய 4 எம்.எல்.ஏக்களும் நேற்று சட்டசபையில், ரத யாத்திரைக்கு தடை விதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ஆனால், பேரவை தலைவர் தனபால் அனுமதி மறுத்ததால், அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த ரதயாத்திரையால் சமூகம் சார்ந்த கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என திமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் முஸ்லீம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால், போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், வரும் 23ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரத யாத்திரை செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல தடைகளையும் மீறி நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் பகுதிக்குள் ரத யாத்திரை வந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து எதிர்கட்சிகள் பேரவையில் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல எனவும் அனைத்து மதத்திற்கும் தமிழகத்தில் சம உரிமை உண்டு எனவும் விளக்கம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.