ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தொடங்கி வைக்கிறார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைக்கிறார். இதுக்குறித்து செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழக முதலமைச்சர் நாளை துவங்கி வைக்கிறார் என்றும், இந்திய நாட்டில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். 

மேலும், தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிய அவர், ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்காது எனவும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டதோடு,  கடை ஒன்றிற்கு 5% பொருட்கள் கூடுதாக விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு செல்பவர்கள் அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிய அவர், பயோமெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழகத்திலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும்,  முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் என்ன செய்யலாம் என்பது தொடர்பாக நாளை முதலமைச்சர் தெரிவிப்பார் எனவும் அவர் கூறினார்.