தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. கொரோனாவை தடுக்க அதிகமான பரிசோதனைகளை செய்து தொற்றுள்ளவர்களை அதிகமான அளவில் கண்டறிய வேண்டும். அந்தவகையில், கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 67,153 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 30 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,79,144 பேரில் 2,21,087 பேர் குணமடைந்துள்ளனர். 

தமிழக அரசு முடிந்தவரை கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டாலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, கொரோனாவுக்கு எதிராக திறம்பட செயல்படவில்லையெனவும், கொரோனா மரணங்களை அரசு மறைப்பதாகவும் குற்றம்சாட்டிவருகிறார். 

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது பதிலடி கொடுத்தார். மதுரைக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்? உயிரிழப்பை மறைக்க வேண்டிய அவசியமே இல்லை. எதிர்க்கட்சிகள் ஏதாவது பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்களுக்கு அதைத்தவிர என்ன தெரியும்? கொடிய வைரஸுக்கு எதிராக உலக நாடுகளே திணறிவரும் நிலையில், இங்கு எதிர்க்கட்சிகள் விமர்சித்து கொண்டிருக்கின்றன. என்றைக்காவது உண்மையை பேசியிருக்கின்றனவா எதிர்க்கட்சிகள்? ஆக்கப்பூர்வமான விஷயங்களை பாராட்டக்கூட மனமில்லாதவர்கள். 

அதிகமான நோய்த்தொற்றுள்ளவர்களை கண்டறிய அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதனால் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனைகள் அதிகமாக செய்வதால், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக பதிவாகிறது. ஆனால் இப்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை கண்டு பயப்பட தேவையில்லை. தொற்றுள்ளவர்களை அதிகமாக கண்டறிவதன்மூலம் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். குறைந்த பரிசோதனைகள் செய்யும் மாநிலங்களில் குறைவான பாதிப்பு உறுதியாகிறது. அவர்களுக்கு எதிர்காலத்தில் இது பாதிப்பாக அமையலாம். ஆனால் தமிழ்நாட்டிற்கு அந்த பயம் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.