கொரோனாவால் நாடு தழுவிய ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை அமலில் உள்ளது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்ற அரசுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு செல்லாமல் வீடுகளில் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால் பணிக்கு செல்லாத அரசு ஊழியர்களுக்கு முழு மாத ஊதியம் வழங்கப்படுமா என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். அதை தெளிவுபடுத்தியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஊதியத்தில் எந்தவித பிடித்தமும் செய்யப்படமாட்டாது. அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான முழு ஊதியமும் வழங்கப்படும். ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக அரசு தரப்பில் வழங்கப்படுவதாக கூறிய ரூ.1000, வீடு வீடாக வந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் வழங்கப்படும்போதே அந்த தொகையும் வழங்கப்படும். இந்த மாதம் இறுதி வரை இலவச ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களது முழு ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முதல்வரின் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் தெளிவு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.