கொரோனா தடுப்பு பணிகளை மத்திய அரசு அறிவுறுத்துவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் தமிழ்நாடு அரசின் துரிதமான நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துவிட்டது. இறப்பு எண்ணிக்கை 400ஐ தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் தொடக்கம் முதல் தாறுமாறாக எகிறிவந்த கொரோனா பாதிப்பு, கடந்த 3 நாட்களாக கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் சிசிச்சை பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில், அதன் பலனாக கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 3 நாட்களாக, அதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளைவிட, அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் வெறும் 94 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு ஆகியவை குறித்து விவரித்த முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார்.செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் முக்கியம். அதற்கு மட்டுமே அரசு முன்னுரிமை கொடுத்து முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

தமிழக அரசு எடுத்துவரும் தீவிர நடவடிக்கைகளால் பாதிப்பு வெகுவாக குறைந்திருக்கிறது. மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாகவே தமிழக அரசு தடுப்பு பணிகளை தொடங்கிவிட்டது. ஜனவரி 23ம் தேதியே விமான நிலையங்களில் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுவிட்டன.

தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து கொண்டிருக்கின்றன. ஜனவரி 23ம் தேதியே விமான நிலையங்களில் பரிசோதனைகள் தொடங்கப்பட்ட நிலையில், மருத்துவ குழுக்களை அமைத்து அவர்களுடன் ஆலோசித்து போதுமான மருந்துகளும் முகக்கவசங்களும் வெண்டிலேட்டர்களும் கையிருப்பில் வைக்கப்பட்டன.


இந்திய  மருத்துவ ஆராய்ச்சி கழகம் கொடுத்த 20 ஆயிரம் பிசிஆர் கிட்(கொரோனா டெஸ்ட் கிட்) வழங்கியது. டாடா நிறுவனம் நமக்கு 40 ஆயிரம் கிட்களை வழங்கியது. அதுபோக ஒரு லட்சத்து 35 பிசிஆர் கிட்கள் உள்ளன. எனவே மொத்தமாக ஒரு லட்சத்து 95 ஆயிரம் பிசிஆர் கிட்கள் தமிழ்நாட்டில் இருப்பு உள்ளது. 3371 வெண்டிலேட்டர்கள் இருப்பில் உள்ளன. ஒரு லட்சத்து 95 ஆயிரம் பிசிஆர் கிட்களில் 68 ஆயிரம் கிட்கள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. 

முழு உடற்கவசங்கள், முகக்கவசங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளன. கொரோனா தீவிரமடைந்த பின்னரே தமிழக அரசு மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் ஆர்டர் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால் இவையெல்லாம் முன்னெச்சரிக்கையாகவே தமிழ்நாட்டில் இருப்பு வைக்கப்பட்டன. இத்தாலி, ஸ்பெய்ன் நாடுகளை போல பாதிப்பு அதிகரித்துவிட்டால், அதை எதிர்கொள்ளுமளவிற்கு தொலைநோக்கு பார்வையுடனும் அதற்கான தயாரிப்புகளுடனும் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.அதேபோல காய்கறி விலைகள் அதிகரித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்களி, தற்போது வெறும் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல காய்கறிகளின் விலைகளும் நியாயமாகவே விற்கப்படுகிறது. அதிக விலைக்கெல்லாம் விற்கப்படவில்லை. கொடூரமாக பரவிவரும் கொடிய நோயை வைத்து அரசியல் செய்கின்றன எதிர்க்கட்சிகள். இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் இந்த நிலை. வேறு எங்குமே இந்த நிலை இல்லை. ஆனால் அரசு கொரோனாவை தடுப்பது ஒன்றை மட்டுமே இலக்காக வைத்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தி, சில தீர்மானங்களையும் நிறைவேற்றியிருந்த நிலையில், நோயை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக கடுமையாக சாடியுள்ளார் முதல்வர் பழனிசாமி.