கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. 

கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிப்பதுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணிகளையும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்துவருகின்றன. 

இதற்கிடையே, டெல்லி நிஜாமுதீன் தப்லீகி ஜமாத் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பதுடன், அவர்களுடன் தொடர்பிலிருந்து கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளை தமிழக அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து ரூ.9000 கோடி நிதியுதவி கேட்டிருந்த முதல்வர் பழனிசாமி, மீண்டும் அந்த நிதியை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே கேட்டிருந்த ரூ.9000 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். என்95 முகக்கவசங்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் வாங்க ரூ.3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். 2019-2020 நிதியாண்டுக்கான டிசம்பர் - ஜனவரி மாதங்களுக்கான ஜிஎஸ்டி நிதியை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி மற்றும் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மானிய தொகை ஆகியவற்றையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.