கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் இதுவரை 9300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை தடுக்கும் விதமாக ஏற்கனவே தேசியளவில் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. தேசியளவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

ஆனால், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே, ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கை நீட்டித்துவிட்டன. ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் பஞ்சாப்பில் ஊரடங்கு நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டது. மே ஒன்றாம் தேதி வரை பஞ்சாப்பில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை மற்றும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவின் பரிந்துரை ஆகியவற்றை கருத்தில்கொண்டு மக்களை கொரோனாவிலிருந்து காக்க ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.