பருவகாலங்களில் பெய்யும் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க 62 தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகாமானோர் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டம் பவானி, கருங்கல் பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். முதலாவதாக இன்று காலை ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம் மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். 

பவானி சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமியிடம், குடிமராமத்து பணிகள் மற்றும் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து சேமிப்பது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.

அவற்றிற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் 1519 ஏரிகளில் ரூ.100 கோடி செலவில் முதற்கட்டமாக குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள், ஏரிகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேலும் 1511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.328 கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை 9 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு மேற்பார்வையிட்டு வருகிறது. 

அதேபோல பருவகாலங்களில் பெய்யும் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து எவ்வாறெல்லாம் சேமிக்க முடியும் என்பதை அறிய ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் அடங்கிய குழு மூன்று மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. அந்த குழு இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

மழைநீர் கடலில் கலக்காமல் அணை கட்டி சேமிக்க மூன்றாண்டு கால நீண்டகால திட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.