chief minister palanisamy criticize dmk on cauvery issue
போராட்டம் யார் வேண்டுமானாலும் நடத்தலாம்; ஆனால் யார் போராடினால் தீர்வு கிடைக்கும் என்பதுதான் முக்கியம் என காவிரி விவகாரத்தில் திமுகவின் போராட்டத்தை முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் உரிமை மீட்பு வெற்றி விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசுதான். காவிரிக்காக திமுக தலைவர் கருணாநிதி நடத்திய போராட்டங்கள் அனைத்தும் நாடகம். காவிரி வழக்கில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து சரியான வாதங்களை முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். ஆனால் சரியாக வாதாடாதது திமுக தான். காவிரி வழக்கில் திமுக சரியாக வாதாடி இருந்தால் எப்போதோ தீர்வு கிடைத்திருக்கும்.

ஆனால் அதிமுக அரசு சரியான வாதங்களை முன்வைத்து காவிரி உரிமையை நிலைநாட்டியிருக்கிறது. 38 ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு சட்ட போராட்டம் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு உரிய நீர் பெற்றுத்தரப்படும் என உறுதியளிக்கிறேன்.

காவிரிக்காக எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை நடத்தின. ஆனால் அவர்களை எல்லாம் விட காவிரிக்காக தீவிர போராட்டங்களை நடத்தியது அதிமுக தான். போராட்டம் யார் வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால் யார் போராடினால் தீர்வு கிடைக்கும் என்பதுதான் முக்கியம். அது மக்களுக்கு தெரியும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
மேலும் இந்தியாவிலேயே அதிகமான பயிர்க்காப்பீடு தந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
