chief minister palanisamy asked four thousand crores

ஓகி புயலால் குமரி மாவட்டம் பேரிழப்புகளை சந்தித்தது. மீனவர்கள் மாயம், மாவட்டம் முழுக்க வெள்ளம், விவசாயம் பாதிப்பு, உயிரிழப்புகள் என ஓகியில் சிக்கி குமரி மாவட்டமே சின்னாபின்னமானது. ஆயிரக்கணக்கான தென்னை, ரப்பர், வாழை மரங்கள் சாய்ந்தன. நெற்பயிர்கள் சேதமடைந்தன. மீனவர்களும் விவசாயிகளும் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். 

ஓகி புயலில் சிக்கி பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவரும் பணிகள் நடந்துவருகின்றன.

ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 2000 கோடி ரூபாய் நிதி தருமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வர் பழனிசாமியும் பிரதமரிடம் உரிய நிதியை விரைவாக வழங்குமாறு கோரிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், குமரி மாவட்டத்தை நேரில் பார்வையிட வந்த பிரதமர் மோடி, மீனவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளை சந்தித்து இழப்புகள் குறித்தும் அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 4047 கோடி ரூபாயை மத்திய அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

ஓகி புயல் பாதிப்பை ஈடுகட்ட பிரதமரிடம் ஸ்டாலின் 2000 கோடி ரூபாய் நிதி கேட்ட நிலையில், முதல்வர் பழனிசாமி இருமடங்காக 4000 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.