புது டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். மேலும் அவரிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். 

தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாட்கள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முதலமைச்சர், தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பிய நிலையில் இன்று 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அதன்படி, இன்று காலை டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் அவரை தி.மு.க.வின் எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் வாசலுக்கே சென்று வரவேற்றனர். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து தி.மு.க. எம்.பி.க்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

பின்னர், புது டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். மேலும் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் வழங்கினார்.

அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளவை: 

*காவிரியின்‌ குறுக்கே கர்நாடகாவால்‌ மேகதாது அணை கட்டும்‌ திட்டம்‌தொடர்பான பிரச்சனை

*பாக்‌ வளைகுடாவில்‌ இந்திய மீனவர்களின்‌ பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப்‌ பாதுகாத்தல்‌ மற்றும்‌ அவர்களின்‌ பாதுகாப்பை உறுதி செய்தல்‌

*"கச்சத்தீவு" மீட்பது மற்றும்‌ தமிழக மீனவர்களின்‌ பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது

* நிலக்கரி குறித்த விவகாரங்கள்‌ - தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள்‌ மற்றும்‌ கூடுதலான இரயில்‌ தொடர்கள்‌ ஒதுக்கீடு செய்யக்‌ கோருதல்‌

*ரெய்கார்‌ - புகழுர்‌ உயர்‌ மின்‌ அழுத்த மின்‌ தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம்‌ வாய்ந்த சொத்தாக அறிவித்தல்‌ 

*மாநிலங்களுடன்‌ மேல்‌ வரிகள்‌ மற்றும்‌ கூடுதல்‌ கட்டணம்‌ மூலம்‌ வரும்‌ வருவாயைப்‌ பகிர்ந்து கொள்வது

*ஜுன்‌ 2022-க்குப்‌ பின்பும்‌ ஜி.எஸ்‌.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல்‌

*மருத்துவ மாணவர்‌ சேர்க்கை கொள்கை மற்றும்‌ தேசிய தகுதி மற்றும்‌ நுழைவுத்‌ தேர்வுக்கு எதிர்ப்பு

*உக்ரைனில்‌ பாதிக்கப்பட்ட மாணவர்களின்‌ படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில்‌ உள்ள மருத்துவக்‌ கல்லூரிகளில்‌
படிப்பைத்‌ தொடர வழியைக்‌ கண்டறிதல்‌.

*பிரதம மந்திரி வேளாண்மை பயிர்‌ பாதுகாப்புத்‌ திட்டத்திற்கு ஒன்றிய அரசின்‌ பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்துதல்‌.

*டிடிஐஎஸ்‌ திட்டத்தில்‌ தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு

*தமிழ்நாட்டில்‌ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டு அமைப்பு ஆய்வுக்கூடம்‌ அமைத்தல்‌

*சேலம்‌ எஃகு ஆலையின்‌ மிகை நிலம்‌ பாதுகாப்பு தொழில்‌ பூங்காவிற்கு வழங்கப்படுதல்‌

*மப்பேடுவில்‌ மல்டி மாடல்‌ லாஜிஸ்டிக்‌ பார்க்‌ வரை ரயில்‌ பாதை அமைத்தல்‌.

*தேசிய கல்வி கொள்கை -2020

*சென்னை மெட்ரோ ரயில்‌ திட்டம்‌ - ॥- இந்திய அரசுக்கும்‌ தமிழ்நாடு அரசுக்கும்‌ இடையே 50:50 பங்கு அடிப்படையில்‌ ஒப்புதல்‌

*2022ல்‌ ஹஜ்‌ புனிதப்‌ பயணத்திற்கான புறப்படும்‌ இடமாக சென்னையை அறிவிக்கக்‌ கோரிக்கை