துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அச்சடிக்கப்பட்ட பேனர் அதிமுகவில் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. 

ஒற்றைத் தலைமை என குரல் கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்திய ராஜன் செல்லப்பா நேற்று உள்ளாட்சி தேர்தல் குறித்து திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டத்தினை நடத்தினார். அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை உருவாகி இருக்கிறது. 

அந்த பேனரில் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பெயர்கள் மாற்றி வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக சார்பில் நேற்று உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாவதற்கான நிர்வாகிகள் கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் நேற்று நடைபெற்றது. இதற்காக அங்கு வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பேனரை செய்தியாளர்கள் படம் பிடித்ததை தொடர்ந்து, காகிதத்தை பேனரில் ஒட்டி, அதிமுகவினர் மறைத்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஏற்கனவே, தேனியில் உள்ள கோயில் ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், ரவீந்திரநாத் எம்.பி என அச்சடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாஜக தலைமையில் அமைச்சரவை அறிவிக்கப்படும் முன்பே ’மத்திய அமைச்சரே வருக’ என ஒட்டப்பட்ட போஸ்டர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 

ஒற்றைத் தலைமை என வலியுறுத்திய ராஜன் செல்லப்பா பங்கேற்ற கூட்டத்தில் இந்தப் பேனர் வைக்கப்பட்டுள்ளது  பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இந்தப் பேனர் மூலம் ஓ.பி.எஸை அதிமுகவுக்கு தலைமை ஏற்க ராஜன் செல்லப்பா கூறினாரா? ராஜன் செல்லப்பாவை தூண்டி விட்டது ஓ.பி.எஸா? என்கிற கேள்விகள் எடப்பாடி தரப்பை அதிர வைத்துள்ளன.