மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ,கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தேனி, திண்டுக்கல் ஆகிய மதுரை உயர்நீதிமன்றம் எல்லைக்குட்பட்ட 13 மாவட்டங்களிலுள்ள பட்டா நிலங்களில் சவுடு மண் அள்ள அனுமதிவழங்க தடை விதித்து மதுரை உயர் நீதி மன்றம் கடந்த 2019 ஆக 28 அன்று உத்தரவிட்டது. 

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சவடு மண், உவரி மண் எடுக்க என அனுமதி பெற்று சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதை தடுக்க ஏராளமானோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்ற தடையை நீக்கக்கோரி மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது என மன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மணல் கடத்தல் சம்பந்தமாக  கிராம நிர்வாக அதிகாரி, போலீசார் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கை விதிமுறைகள்  மாவட்ட ஆட்சியர்களுக்கு  தெரிந்து வைத்திருக்கிறார்களா? தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா? டாஸ்மாக்கை  அரசு நடத்துவதுபோல மணல் விற்பனையையும்  தமிழக அரசே ஏன் ஏற்று நடத்தக் கூடாது? ஆண்டுக்கு 10 ஆயிரம் மணல் கடத்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அரசு  பதில்கள் நீதிமன்றத்தை திருப்திப்படுத்த மட்டுமே தரப்படுகின்றன என நீதிபதிகள் கடிந்து கொண்டனர். மேலும் விசாரணையை நீதிபதிகள் செப் 29க்கு  ஒத்தி வைத்தனர்.

எத்தனை கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மணல் கொள்ளை விவகாரத்தில் எல்லா கட்சிகளுக்கும் ஒரு மர்மமான கூட்டணி இருக்கும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது. அரசியல் கட்சி நிர்வாகிகள் எந்த ஊரிலாவது மணல் கடத்தலை தடுத்து போராட்டம், நடத்தி மீடியாக்களை கூட்டி, பேட்டி அளித்துள்ளார்களா? மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் துணிந்து அதிரடி நடவடிக்கை எடுத்தால் அடுத்து  ஊட்டி, கூடலூர், களியக்காவிளை, குமுளி, குப்பம்,  மண்டபம், மாதேஸ்வர மலைக்காடு உள்ளிட்ட மலைப்பகுதி எல்லைக்கு மண் அள்ள முடியாத பகுதிக்கு இட  மாறுதல் வரும். அல்லது தமிழ் வளர்ச்சித்துறை, புராதனச் சின்னங்கள் பராமரிப்பு , கொரோனா சோதனை முகாம் பணி நியமனம் பெறுவர். விவசாயியான நமது முதல்வர் மனப்பூர்வமாக இறங்கி நேரடி உத்தரவு போட்டால் வருவாய், காவல் அதிகாரிகளால் மணல் கொள்ளையை ஒழிக்க முடியும். இதனை செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே..!

விவசாயியான தாங்களே உணராவிட்டால், அரசியல்வாரிசுகளும், சினிமா நட்சத்திரங்களும் அரசியலுக்கு வரும் நிலையில் அவர்களுக்கு மண் மலடுபட்டுப்போவதை எப்படி உணர்வார்கள் விவசாய முதல்வரே..! இதனை செய்தால் விவசாயிகள் தங்களை மனதில் நிறுத்தி அடுத்த முதல்வராக்க வழிவகுப்பார்கள். அதற்கு இந்த நடவடிக்கையும் ஒரு வாய்ப்பாக அமையலாம்..!