எஃகு கோட்டையான அதிமுகவுடன் மோதினால் மண்டை உடையும் என்றும், வீண் பழி சுமத்தினால் வெளியில் நடமாட முடியாது என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில்;- திமுகவை போல் சுயநலம் பிடித்த கட்சியல்ல அதிமுக. எங்கள் இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. இங்கே இருக்கின்ற மக்கள் தான் வாரிசாக, பிள்ளைகளாக நினைத்தார்கள். அந்த பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இருபெரும் தலைவர்களும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்கள். அதேவழியில் இந்த அரசும் பின்பற்றி செயல்பட்டு வருகின்றது. ஆனால் திமுக அப்படியல்ல, அவர்கள் குடும்ப கட்சி. அவர்கள் குடும்பத்திலே இருக்கின்றவர்கள் தான் பதவிக்கு வர முடியும். வேறு யாரும் பதவிக்கு முடியாது.

அப்படி தான் இன்றைக்கு அந்த கட்சி போய் கொண்டிருக்கிறது. அது கட்சியல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் சேர்மன், குடும்ப உறுப்பினர்கள் தான் டைரக்டர்கள். வேறு யாரையும் டைரக்டராக போட மாட்டார்கள். அமைதி பூங்காவாக உள்ள தமிழகம் திமுக வெற்றி பெற்றால் ரவுடி ஆட்சியாக மாறிவிடும் என விமர்சித்தார். உங்கள் மகன் உதயநிதி கூட்டத்தில் பேசுகின்ற போது பெண்களை இழிப்படுத்தி பேசுகிறார். அதை நீ கண்டித்தாயா. உதயநிதி பேசிய பேச்சு பெண் குலத்தையே இழிவுப்படுத்துகின்ற பேச்சு. தந்தை எவ்வழியோ, அப்படித்தானே மகனும் இருப்பார். அவர்களுக்கு நாட்டு மக்களின் எண்ணம் குறித்து தெரியாது.

மேலும், பேசிய முதல்வர் ஜெகத்ரட்சகனை எடுத்து கொள்ளுங்கள் அவரிடம் இருக்கும் பணத்திற்கு கணக்கே இல்லை. அரசிடம் கூட அவ்வளவு பணம் இருக்காது. அவரிடம் அவ்வளவு பணம் இருக்கிறது. திமுக எம்பிக்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள். இவர்கள் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றால், இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் அதிமுகவினர் நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும், அதன் மூலமாக மக்கள் நன்மை பெற வேண்டும். அந்த ஒன்றிற்காகதான் இன்றைக்கு பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். எந்த அரசியல் கட்சித் தலைவரும், தவறான செய்தியை ஒரு பெண்ணிடத்திலே சொல்லி கொடுத்து, அதை பேச வைத்து, பிரச்சுரம் செய்து, அரசியல் நாடகம் ஆட மாட்டார்கள். இதன்மூலம் அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கிறார் ஸ்டாலின்.

நேருக்கு நேர் அரசியலில் மோதிப் பார். அப்பாவி மக்களை வைத்து அவர்களை பேச வைத்து மோத வேண்டாம். அதிமுக எஃகு கோட்டை, இதில் மோதினால் மண்டை தான் உடையும். எங்கள் இயக்கத்தின் தலைவர்கள் மீதோ, தொண்டர்கள் மீதோ வீண் பழி சுமத்தினால் நீங்கள் வெளியில் கூட நடமாட முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.