Asianet News TamilAsianet News Tamil

மூன்று வேளாண் சட்டங்களையும் புகழந்து தள்ளிய எடப்பாடியார்... இதிலும் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்வதாக கோபம்..!

விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாதவர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். எனவே, யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்.

Chief minister Edappadi Palanisamy on central government agriculture draft
Author
Chennai, First Published Sep 19, 2020, 9:50 PM IST

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம் மற்றும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை, தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது என்றும், இவை விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்கள் என்றும், இவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும், இச்சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக்கொள்ள வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இச்சட்டங்கள் வேளாண் விற்பனைக் கூடங்களுக்கும், உழவர் சந்தை திட்டத்திற்கும் எதிரானது என்றும், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும் இதில் இல்லையென்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Chief minister Edappadi Palanisamy on central government agriculture draft
மத்திய அரசால், (அ) விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச்சட்டம், 2020; (ஆ) விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச் சட்டம், 2020; (இ) அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், 2020 ஆகிய சட்டங்கள் கடந்த ஜூன் 5 அன்று அவசரச் சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பின்பு இச்சட்டங்கள் மக்களவையில் முன்மொழியப்பட்டு, கடந்த 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இச்சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
(அ) தமிழ்நாட்டில் கோகோ, கரும்பு சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில் ஒப்பந்த முறை ஏற்கெனவே நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற முறைகளை ஒழுங்குபடுத்த தற்போது கொண்டு வரப்பட்ட விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020 ஒப்பந்த சாகுபடி முறையை ஒழுங்குபடுத்த உதவும். மேலும், இச்சட்டம், கடந்த 2019 ஆம் ஆண்டு, விவசாயிகளின் நலன் கருதியும், அவர்களின் வருமானத்தை பெரிய அளவில் பெருக்கவும், தமிழக அரசால் கொண்டு வந்த தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின் நோக்கங்களையும் உறுதிப்படுத்தும்.

Chief minister Edappadi Palanisamy on central government agriculture draft
ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இச்சட்டத்தில், விவசாயிகளைக் கட்டாயப்படுத்தவோ, அல்லது பாதிக்கும் வகையிலோ உள்ள ஷரத்துகள் எதுவும் இல்லை. வேளாண் வணிக நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பண்ணை சேவைகள் மற்றும் விளைபொருட்கள் கொள்முதலுக்காக விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதன்மூலம், விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்படாமல், ஒப்பந்த விலை மூலம் உறுதியான வருவாய் கிடைக்கும். ஒருவேளை ஒப்பந்த விலையை விட, சந்தை விலை அதிகரித்து விட்டால், அந்தக் கூடுதல் தொகையில் விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கவும் இந்தச் சட்டத்தில் இடம் உள்ளது.
அரசியல் காரணங்களுக்காக தற்போது இந்த ஒப்பந்தச் சட்டத்தினை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர், ஜெயலலிதா அரசு இதுபோன்ற சட்டத்தினை தமிழ்நாட்டில் அமல்படுத்திய போது எதிர்க்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இச்சட்டத்தின்படி, ஒப்பந்தம் செய்யும் ஒரு விவசாயி மற்றும் அவரிடமிருந்து கொள்முதல் செய்யும் நபர் ஆகிய இருவருக்கிடையே ஒருமித்த கருத்தும், வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற தன்மையும் இருத்தல் வேண்டும். முன்பே, ஒப்புக்கொள்ளப்பட்ட விலை கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், விவசாயிகள், விலைவீழ்ச்சி போன்ற பாதிப்புகளிலிருந்து காப்பாற்றப்படுவதோடு, கொள்முதலாளர்களும் குறிப்பிட்ட தரம் மற்றும் அளவிலான வேளாண் விளைபொருட்களை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

Chief minister Edappadi Palanisamy on central government agriculture draft
இதன்மூலம், விவசாயிகள் மற்றும் கொள்முதல் செய்வோர் இருவர் நலனும் பாதுகாக்கப்படும். விவசாயிகள் அவர்களுக்குரிய பயன்களை உறுதியாகப் பெறுவதோடு, உணவு பதப்படுத்துதலுக்குத் தேவையான தரமான விவசாய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்து, இதுபோன்ற தொழில்களும் கிராமப்பகுதிகளில் பெருகி வேலைவாய்ப்பு ஏற்படும்.
ஆ) விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020-ன் வகைமுறைகளை ஆராயும்போது, இவை வேளாண் விளைபொருட்களை வணிக பகுதி என அறிவிக்கை செய்யப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் முழுமையான சுதந்திரத்தினை வழங்குகிறது. பல்வேறு சந்தைமுறைகள் ஒருங்கே செயல்படும் நிலை இச்சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுவதால், விவசாயிகள் முறையான போட்டி வணிகம் மூலம் லாபகரமான விலையினை பெற்றிட வழிவகை ஏற்படுகிறது. மேலும், ஏற்கனவே உள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த வேளாண் விற்பனை மைய கட்டமைப்புகளையும் மேம்படுத்த வாய்ப்புகள் ஏற்படும்.
தமிழ்நாட்டில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குபடுத்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இடைத்தரகர்கள் என்ற நிலை இல்லை. வேளாண் விற்பனை வளாகம் மற்றும் அதற்கு வெளியில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யும்போது, சந்தைக் கட்டணம் ஒரு சதவீதம் மட்டுமே பொருட்களை வாங்கும் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இது விற்பனை மையக் கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

Chief minister Edappadi Palanisamy on central government agriculture draft
ஆனால், பஞ்சாப் மாநிலத்தில், முக்கிய விளைபொருட்களான நெல், கோதுமைக்கு சந்தைக் கட்டணம் மூன்று சதவீதத்துடன் மூன்று சதவீதம் உள்ளாட்சி மேம்பாட்டு மேல் வரியாக வசூலிக்கப்பட்டு, அந்த மேல்வரி அரசு கணக்கில் சேர்க்கப்படுகிறது. இது தவிர, 2.5 சதவீதம் இடைத்தரகர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும், பொருட்களை வாங்கும் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்தப் புதிய சட்டப்படி, சந்தை வளாகம் தவிர அறிவிக்கை செய்யப்பட்ட வணிக பகுதிகளில் இத்தகைய கட்டணம் வசூலிக்க இயலாது என்பதால், பஞ்சாப் மாநில அரசுக்கு பெரிய அளவு வருவாயில் இழப்பு ஏற்படும். அதே சமயம், இந்தக் கட்டாயச் சந்தைமுறையினை நீக்கி, விவசாயிகளுக்கு விளைபொருள் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ள முழு சுதந்திரத்தை வழங்குவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், விவசாயிகள் தங்கள் விருப்பம் போல் எவ்வித தடையும் இன்றி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்திடலாம். குறிப்பாக, இதற்கென விவசாயிகளோ, வணிகர்களோ எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதோடு மட்டுமல்லாமல், மாநிலத்திற்கு உட்பட்ட பிற பகுதிகளிலும், மாநிலத்திற்கு வெளியிலும், ஒளிவு மறைவற்ற முறையில் வேளாண் விளைபொருட்களை வணிகம் மற்றும் வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையினை இச்சட்டம் உருவாக்கும். இது தவிர, மின்னணு வர்த்தக முறைகள் மூலம் விளைபொருட்களை இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கும் நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு போட்டி முறையில் நல்ல விலையைப் பெறுவது உறுதி செய்யப்படும்.Chief minister Edappadi Palanisamy on central government agriculture draft
இச்சட்டத்தில் வணிகப் பகுதி என்ற புதிய அணுகுமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதியில் வியாபாரம் செய்பவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் இச்சட்டத்தின்படி வசூலிக்கப்படமாட்டாது. விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வணிகர்களிடம் நிரந்தர கணக்கு எண் மட்டும் இருந்தால் போதுமானதாகும். எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல் விவசாயிகளுக்கு நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை. இச்சட்டம் எவ்விதத்திலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்குள் நடைபெறும் வணிக செயல்பாடுகளைப் பாதிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது குறைந்தபட்ச ஆதாரவிலையில் நடைபெறும் கொள்முதலும் பாதிக்காது.
(இ) அத்தியவாசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், 2020 இல், தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை போர், பஞ்சம், அசாதாரணமான விலை உயர்வு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளில், கட்டுப்பாடுகளை விதிக்க அரசால் அரசிதழில் அறிவிக்கை செய்து, முறைப்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. தோட்டக்கலை விளைபொருட்களின் விலையேற்றம் 100 சதவீதத்திற்கு மிகும்போதும், வேளாண் விளைபொருட்களின் விலையேற்றம் 50 சதவீதத்திற்கு மிகும்போதும், அவற்றின் இருப்பு அளவினை நெறிமுறைப்படுத்த இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, தேவையில்லாமல் இருப்பு அளவுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. இதனால், விவசாயிகள் மட்டுமன்றி நுகர்வோரும் பயன்பெறுவர். இதனால், கார்ப்பரேட் நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவதற்கு வழிவகுக்கும் என்ற கூற்றில் துளியும் உண்மையில்லை. மேலும், உணவு பதப்படுத்துதல் மற்றும் விநியோகத் தொடர் மேலாண்மை உறுதியாக்கப்பட்டு, விவசாயிகளும், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் ஒருங்கே பயன்பெற இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதையும், சந்தை செலவுகளைக் குறைத்து, லாபகரமான விலை கிடைப்பதையும், சந்தைக்கு வெளியே கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதையும் உறுதி செய்யும்.

Chief minister Edappadi Palanisamy on central government agriculture draft
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி விவசாயம் மாநிலப் பட்டியலில் இருந்தாலும், உணவுப் பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் மத்திய பட்டியலில் வரிசை எண் 42-லும், மாநிலங்களுக்கு இடையிலான வணிகம் மத்திய/ மாநில கூட்டுப் பட்டியலில் வரிசை எண் 33-க்கு உட்பட்டு, மாநில பட்டியல் வரிசையில் 26-லும் உள்ளதால், இந்தச் சட்டங்கள் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இச்சட்டங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்துள்ளதால், இதன் மூலம் நமது தமிழக விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற அடிப்படையிலும், மாறாக வேளாண் விளைபொருட்களை நல்ல விலையில், எங்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரத்தை அளிக்கும் என்ற அடிப்படையிலும், தமிழ்நாடு அரசு இந்தச் சட்டங்களை விவசாயிகளின் நலன் கருதி எதிர்க்கவில்லை.
இதனால் தற்போது குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் போன்றவை எந்த விதத்திலும் பாதிக்காது. விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 2020, உழவர் சந்தைத் திட்டத்திற்கு எதிரானது என்ற கூற்று முற்றிலும் தவறானது ஆகும். இச்சட்டத்தின் பகுதி ஒன்று, பிரிவு (அ)(ii)-ன்படி, உழவர்-நுகர்வோர் சந்தைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதால், அவை தொடர்ந்து இயங்குவதற்கு தடையேதும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதைப் போல் அல்லாமல், இச்சட்டங்களில் உழவர் சந்தைத் திட்டத்திற்கும், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் வழிவகை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், உணவுப் பொருட்களை நிறுவனங்கள் பதுக்குவதைத் தடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Chief minister Edappadi Palanisamy on central government agriculture draft
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்வதற்காகவும், இருப்பில் வைப்பதற்காகவும், விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டில் தொடரும் என்பதால், விவசாயிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இச்சட்டத்தின் பகுதி இரண்டு, பிரிவு (4)(i)-ன்படி, வணிகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் மற்றும் பகுதி இரண்டு, பிரிவு (5)(i)-ன்படி மின்னணு வர்த்தக முறையைப் பராமரித்து இயக்கும் நபர்கள் ஆகியோர் நிரந்தரக் கணக்கு எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமே தவிர, விவசாயிகள் நிரந்தரக் கணக்கு எண் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
தற்போது மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சட்டங்களினால், தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எதிர்பாராத விலை வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, அவர்களுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும் என்பதனை விவசாயி ஆகிய நான் நன்கு உணர்ந்ததால்தான், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. எதிர்க்கட்சித் தலைவரைப் போல் விவசாயத்தைப் பற்றியோ, விவசாயிகளின் நலனைப் பற்றியோ நான் அறியாதவன் அல்ல. விவசாயிகளின் நலன் கருதி, நீர் மேலாண்மைக்காக குடிமராமத்துத் திட்டம், தடுப்பணைகள் கட்டும் திட்டம், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களைப் பேண, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களையும், சட்டங்களையும் வகுத்தது தமிழக அரசுதான்.Chief minister Edappadi Palanisamy on central government agriculture draft
விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாதவர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். எனவே, யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் எப்போதுமே தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பதைதான் தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஆகவே, ஒருமுறை அல்ல, ஓராயிரம் முறை நான் விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். விவசாயிகளின் நலனைக் காக்க, அனைத்துவிதமான உறுதியான நடவடிக்கைகளும் தமிழக அரசு தொடர்ந்து எடுக்கும் என வலியுறுத்துகிறேன்" என அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios