குடிமராத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் ஸ்டாலின் முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  

சேலம், எடப்பாடி அருகே உள்ள கட்சராயன் ஏரியை திமுகவினர் பொதுமக்களுடன் சேர்ந்து தூர்வாரினர்.

இதைதொடர்ந்து அந்த ஏரியில் தமிழக அரசு வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தது. இதனால் அந்த ஏரியை பார்வையிட அந்த தொகுதி திமுக மாவட்ட செயலாளர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் ஸ்டாலினுக்கு போலீசார் தரப்பில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்ப்பையும் மீறி கோவையில் இருந்து சேலம் செல்வதற்காக மு.க.ஸ்டாலின், காரில் சென்று கொண்டிருந்தபோது கோவை, சுங்கச்சாவடி அருகே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அனுமதியையும் மீறி மு.க.ஸ்டாலின் செல்ல முயன்றதால், அவரை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், திருவண்ணாமலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அரசுக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு இருப்பதை எதிர்கட்சியால் பொறுத்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.  

நீர் நிலைகளில் தூர்வாராமல் கோயில் குளத்தில் தூர் வாருகிறார் முக ஸ்டாலின் என்றும் அரசு ஏரிகளையும் குளங்களையும் தூர் வார வேண்டுமென்றால் முறையான அனுமதி பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

குடிமராத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் ஸ்டாலின் முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.