முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்க  டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்க உள்ளார். 

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. கடந்த 2020 நவம்பரில், சென்னையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியை உறுதி செய்தனர். இதனையடுத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

ஆனால், அதை பாஜக தலைவர்கள் ஏற்க மறுத்து வந்தனர். தேசிய ஜனநாய கூட்டணி முடிவு செய்பவரே முதல்வர் என மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பான அதிமுக எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவருடன் தான் கூட்டணி என கே.பி.முனுசாமி  திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நேற்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர், சி.டி.ரவி முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், வரும் 18 ம் தேதி முதல்வர் பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அப்போது, பிரதமர் மோடியை சந்தித்து  ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். மேலும், அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்வதுடன், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

இதனிடையே, கடந்த ஜனவரி 7ம் தேதி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக டெல்லி சென்றவர். சசிகலா விடுதலையில் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது மற்றும் அரசியல் தொடர்பாகவும் பாஜக முக்கியத் தலைவர்களை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பினார். இந்நிலையில், தினகரன் டெல்லி சென்று வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென பிரதமர் மோடி சந்திக்க உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.