தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று சொல்வதற்கு ரஜினி என்ன அரசியல் கட்சித் தலைவரா,  அவர் ஒரு நடிகர் என,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பதில் அளித்துள்ளார்.  கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது  செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு  அவர் பதில் அளித்தார்.  உள்ளாட்சி தேர்தலில் தற்போதுள்ள அதிமுக கூட்டணி தொடருமா.?  அதில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.?  என செய்தியாளர்கள் கேட்டதற்கு,  நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றார். 

அதே கூட்டணியுடன் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.  சமீபத்தில் ரஜினி  கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை,  எனவே தமிழகத்தில் வெற்றிடம் நிலவுவதாக கூறியிருந்தார்.  இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி,  தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை.  அது இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியின் மூலம் நிரூபணமாகி உள்ளது என்ற அவர்,  ரஜினி என்ன அரசியல் கட்சித் தலைவரா.?  அவர் ஒரு நடிகர்.  என காட்டமாக  கூறியதுடன் தமிழகத்தில் வெற்றியும் இல்லை அது நிரப்பப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

அமமுகவின் புகழேந்தி அதிமுகவிற்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா எனக் கேட்டதற்கு,  அதிமுகவில் இணைவது குறித்து புகழேந்தி கடிதம் கொடுத்தால் அதை தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்து முடிவு செய்வார்கள் எனக் கூறினார்.  ரஜினியின் கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளது தமிழக அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.