பாஜக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்குவதாக கூறி ரஜினிக்கு பிரபல ஆடிட்டர் ஒருவர் ஆசையை தூண்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினியை தமிழக பாஜக தலைவராக்குவதற்கான முயற்சி  ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. ஆனால் ரஜினி அதற்கு பிடிகொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் பாஜக இருக்கும் நிலையில் தான் அந்த கட்சிக்கு தலைமை ஏற்பதால் ஒன்றும் ஆகிவிடாது என்பது தான் ரஜினியின் முடிவு என்கிறார்கள். மேலும் எந்த கட்சியிலும் சேராமல் தனியாக கட்சி ஆரம்பித்தால் தான் தனக்கு மரியாதை என்பதிலும் ரஜினி உறுதியாக உள்ளதாக சொல்கிறார்கள். 

ஆனால் ரஜினியை எப்படி பாஜகவிற்கோ அல்லது பாஜக கூட்டணிக்கோ கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதில் அவரது நண்பரான ஆடிட்டர் ஒருவர் தீவிரமாக செயல்படுவதாக கூறுகிறார்கள். தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் பாஜக தனது அரசியல் காய் நகர்த்தல்களை தீவிரமாக்கியுள்ளது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யாரை கொண்டு வருவது என்பதில் அமித் ஷா மிகவும் தீவிர ஆலோசனையில் உள்ளார்.

 

அடுத்த தேர்தலில் தென் மாநிலங்களில் இருந்து கூடுதல் எம்பிக்களை பெற வேண்டும் என்பது தான் பாஜகவின் மாஸ்டர் பிளான். அதற்கு சரியான ஒரு நபரை பிடிக்க அமித் ஷா ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில் ரஜினியையும் ஒரு ஆப்சனாக டெல்லிக்கு பரிந்துரைத்துள்ளார் அந்த ஆடிட்டர். ஆனால் ரஜினி இந்த விஷயத்தில் மவுனம் காப்பதால் பிளான் பிக்கும் ஆடிட்டர் தயாராகி வருவதாக சொல்கிறார்கள். 

2021 சட்டப்பேரவையில் அதிமுக – பாஜக – பாமக – தேமுதிக ஆகிய கட்சிகளை இணைத்து ரஜினியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தலாம் என்று ஆடிட்டர் யோசனை சொல்லியுள்ளதாக சொல்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் மக்கள் மன்றத்தின் தலைவர் என்கிற பெயரில் அரசியலில் களம் இறங்கவும் அவர் ஆலோசனை வழங்கியதாக கூறியுள்ளார். இது குறித்து ரஜினியும் யோசிக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.