தனது டெல்லி லாபி மூலமாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓரம்கட்ட எடப்பாடியார் வியூகம் வகுத்து வருவதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

சட்டமன்ற தேர்தலில் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்கிற ஒரு மலைபோன்ற வியூகத்தை வகுத்து அதில் வெற்றி பெற எடப்பாடி பழனிசாமி படிப்படியாக முன்னேறி வருகிறார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா கை காட்டியதால் முதலமைச்சர் ஆனார். ஆனால் அதன் பிறகு சசிகலா அணியில் இருந்து விலகி தனி அணியாக செயல்படத் தொடங்கியது முதல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அரசை எவ்வித தடங்கலும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.

சசிகலா சிறை சென்ற நிலையில் மூன்று மாதங்கள் கூட எடப்பாடியால் ஆட்சியை தக்க வைக்க முடியாது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கி கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரமிக்க முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வருகிறார். இதற்கு காரணம் டெல்லியில் அவர் வளர்த்து வைத்துள்ள வலுவான லாபி தான் என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதே போல் ஓபிஎஸ்சுக்கும் டெல்லியில் பலமான லாபி உண்டு.

அதிமுகவை இரண்டாக ஓபிஎஸ் உடைக்க உதவியது அந்த லாபி தான். இதே போல் மீண்டும் ஓபிஎஸ் அதிமுகவில் இணைய காரணமாக இருந்ததும் டெல்லி லாபி தான். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் என இரண்டு பதவிகளுடன் ஓபிஎஸ் அதிமுக திரும்பியதன் பின்னணியில் டெல்லியின் காய் நகர்த்தல்கள் பெரும்பங்கு ஆற்றின. இப்படி கடந்த மூன்று ஆண்டு கால அதிமுக ஆட்சி மற்றும் கட்சி நடவடிக்கைகளில் டெல்லி பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. அதிமுகவில் ஓபிஎஸ் இணையும் போதே ஓராண்டில் மீண்டும் அவரை முதலமைச்சராக்குவதாக டெல்லியில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த ஓராண்டுக்குள் எடப்பாடியார் டெல்லியில் வலுவான லாபியை உருவாக்கியிருந்தார். இதனால் வாக்குறுதிப்படி ஓபிஎஸ்சால் மீண்டும் முதலமைச்சர் பதவியை பெற முடியவில்லை. இதே போல் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து மகனை மத்திய அமைச்சராக்க ஓபிஎஸ் டெல்லி சென்று காய் நகர்த்தினார். ஆனால் அதனை சென்னையில் இருந்தபடியே தவிடுபொடியாக்கினார் எடப்பாடியார். இப்படி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி லாபி மூலமாகவே ஓபிஎஸ், இபிஎஸ் சடுகுடு ஆடி வருகின்றனர். இந்த நிலையில் தான் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற சலசலப்பு எழுந்துள்ளது.

கட்சியில் பெரும்பாலானவர்கள் எடப்பாடியாருக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் ஓபிஎஸ் டெல்லி லாபி மூலமாக இந்த விவகாரத்தை வேறு பக்கம் திருப்பிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ்சுடன் எடப்பாடியார் தற்காலிக சமாதான உடன்படிக்கை செய்து கொண்டுள்ளார். அதே சமயம் டெல்லி லாபி மூலமாக முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வேலையையும் எடப்பாடியால் முடுக்கிவிட்டுள்ளார். வழக்கம் போல் இதற்காக தனது தளபதிகளான இரண்டு அமைச்சர்களை டெல்லி அனுப்ப அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

அமைச்சர்கள் தங்கமணி, எஸ்பி வேலுமணி இதற்காக நேற்றே டெல்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக டெல்லி செல்லும் விமானத்தில் டிக்கெட்போடப்பட்டிருந்தது. ஆனால் டெல்லியில் அவர்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த நபர் உடல் நலக்குறைவால் திடீரென மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் டெல்லி செல்லும் திட்டத்தை இருவரும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். டெல்லி சென்று அந்த நபரை சந்தித்து முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ்சை ஓரங்கட்டிவிட்டால் எடப்பாடியார் தேர்தல் பிரச்சாரத்தை மின்னல் வேகத்தில் துவக்கி விடும் ஆர்வத்தில் உள்ளார். இதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் தயாராகிவிட்டன.

டெல்லியில் நகர்த்தப்படும் காய்களில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என யாருக்கு வலுவான ஆதரவு இருக்கிறதோ அவர்கள் தான் அதிமுகவை தேர்தலில் வழிநடத்துபவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். இதில் பாஜகவுடனான கூட்டணி, ஒதுக்கப்படும் தொகுதிகள் என பல விஷயங்கள் அடிப்படையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.