அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளிலும் இருந்து எதிர்பார்த்த அளவிற்கு ரெஸ்பான்ஸ் இல்லாததால் எடப்பாடி பழனிசாமி டென்சனில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை கடந்த ஜனவரியிலேயே தீர்மானித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக அதாவது மார்ச் மாதமே பிரச்சாரத்தை துவக்குவது என்பது தான் அவரின் திட்டமாக இருந்தது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதுநாள் வரை தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த சுனிலை தனக்காக பணியாற்ற ஒப்பந்தம் செய்திருந்தார் எடப்பாடி. ஆனால் கொரோனா காரணமாக இதில் சிக்கல் எழுந்தது. இதனால் பிரச்சார திட்டத்தை ஆகஸ்டுக்கு ஒத்திவைத்தார் எடப்பாடி. ஆனால் ஓபிஎஸ் முரண்டு பிடித்த காரணமாக அதுவும் தள்ளிப்போனது.

இந்த நிலையில் தான் நீண்ட இழுபறி, பேரம், பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டார். மேலும் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி போட்டியிடுவார் என்று அறிவிக்கவும் செய்தார் ஓபிஎஸ். இதனால் ஒரு மிகப்பெரிய தடைக்கல்லை தகர்த்த பெருமிதத்தில் அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிரந்தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பன போன்ற கோஷங்கள் விண்ணைப்பிளந்தன.

ஆனால் அதே நாள் கன்னியாகுமரியில் பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பார்க்க முடியாது என்றார். போதாக்குறைக்கு திமுக பாஜக கூட்டணிக்கு வரவும் வாய்ப்பு இருப்பதாக குண்டை தூக்கி போட்டார். முதலமைச்சர் வேட்பாளராக தேர்வாகியுள்ள தனக்கு கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக போன்றவை துணை நிற்கும் என்று அவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அந்த கட்சிகள் இந்த விவகாரத்தில் மவுனம் காத்தன. இதனால் எடப்பாடியாருக்கு டென்சன் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

அதே சூழலில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி  அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. கூட்டணியில் உள்ள கட்சிகளே கண்டுகொள்ளாத நிலையில் ஜாதிப்பாசத்தில் ஈஸ்வரனின் கட்சி, எடப்பாடியாருக்கு பூஸ்ட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இதனை சுட்டிக்காட்டி கூட்டணி கட்சிகளை எடப்பாடி தரப்பில் இருந்து தொடர்பு கொண்டனர். பிறகு தான் தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த தகவலை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிக்கையாகவே வெளியிட்டது. பிறகு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அவரும் கூட பாஜக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பீர்களா என்கிற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். அதே சமயம் பாமக மட்டும் இந்த விவகாரத்தில் கனத்த மவுனத்தில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாமகவை விழுந்து விழுந்து கவனித்தவர் எடப்பாடி பழனிசாமி. மேலும் ராமதாஸ் கோரிக்கைகள் அனைத்தையும் உடனுக்கு உடன் நிறைவேற்றி அவரின் உள்ளத்தை கவர்ந்திருந்தார்.

இதனால் அடிக்கடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி ராமதாஸ் அறிக்கைகள் வெளியிட்டு வந்தார். நடப்பது பாமக கூட்டணி ஆட்சி தான் என்பது போல், பாமக பல காலமாக கோரிக்கைகளாக முன்வைத்த விஷயங்களை எல்லாம் உடனுக்கு உடன் சரி செய்து கொடுத்தார் எடப்பாடி. ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்த பிறகு ராமதாஸ் தரப்பிடம் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் வரவில்லை. குறைந்தபட்சம் ட்விட்டரில் ஆவரது ராமதாஸ் தனக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த எடப்பாடியாருக்கு ஏமாற்றமே கிடைத்தது. முதலமைச்சர் தரப்பில் இருந்து ராமதாஸை தொடர்பு கொண்டு பேசியும் எந்த ரெஸ்பான்சும்இல்லை.

இந்த நிலையில் தான் பாமக நிர்வாகிகள் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அண்மையில் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது எடப்பாடி பழனிசாமி தனது வருத்தத்தை வெளிப்படையாக கூறியதாக சொல்கிறார்கள். அதற்கு பாமக நிர்வாகிகள் தரப்பில் இருந்தும் சில தகவல்கள் பறிமாறப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்பது குறித்து பாமக எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் பாமக கூட்டணி குறித்து திமுகவுடன் திரைமறைவில் பேசி வருவதும் எடப்பாடியை அப்செட்டாக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.