மோடியின் சமீபத்திய தூக்கங்களுக்கு பெரும் குடைச்சல் கொடுத்தவர் ப.சிதம்பரம். பி.ஜே.பி.யின் பொருளாதார கொள்கைகளை மிக கடுமையாக விமர்சித்து, அதில் உள்ள ஓட்டைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து துவைத்து தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். இதனால் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். 

அதிகார் மையத்தின் ஆத்திரம் நிச்சயம் தன்னை பாதிக்கும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம்  சொல்லிக் கொண்டிருந்தார் சிதம்பரம். ஆனால் நேரடியாக தன்னை தாக்காமல், தனது குடும்பத்தினர் மீது கை வைப்பதுதான் அவருக்கு பெரும் மன சஞ்சலத்தை தந்தது. 

இந்நிலையில், அவர் எதிர் பார்த்தது போலவே ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது சி.பி.ஐ. இந்த கைதை ப.சி. ஏற்கனவே எதிர்பார்த்தார்தான். 
ஆனால் சி.பி.ஐ. அத்தோடு நிற்கவில்லை, கார்த்தி சிதம்பரத்தின் பர்ஷனல் லேப்டாப்பில் இருந்த அவரது வங்கிப் பரிவத்தனைகள் தொடர்பான தகவல்கள், இமெயில் விஷயங்கள் ஆகியவற்றையும், அவரது ஆடிட்டரான பாஸ்கரராமனின் கம்ப்யூட்டரிலிருந்து உருவப்பட்ட ஹார்டு டிஸ்குகள் ஆகியவற்றை அள்ளிக் கொண்டிருக்கிறது. 

இவற்றை முழுமையாக மேய்ந்து பார்த்ததில் புருவம் உயர்த்திவிட்டதாம் சி.பி.ஐ. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த  காலத்தில் கார்த்தியின் பணப்போக்குவரத்துகள் குறித்து மீண்டும் மீண்டும் வெகு துல்லியமாக அலசி, பல விஷயங்களை சேகரித்திருக்கிறது சி.பி.ஐ. அதிகப்படியான பண விளையாடல்கள் அவரது அப்பாவின் அதிகாரத்தால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது! என்பதே சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. 

இதனால் அடுத்த டார்கெட்டாக சிதம்பரத்தை நோக்கி திரும்பியிருக்கிறார்கள். சிதம்பரத்தையும் நிச்சயம் கைது செய்தே தீருவது! என்கிற தீர்மானத்துடனே மூவ்களை துவக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள். இதனால் டில்லி செங்கோட்டையின் உள் வட்டாரமே பரபரத்துக் கிடக்கிறது. 

சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் இருவரும் பொருளாதாரம் மற்றும் ஹைலெவல் சட்ட நுணுக்கங்கள் ஆகியவற்றில் பெரிய புலிகள். எனவே சர்வ சாதாரணமாக சில ஆதாரங்களை வைத்து சிதம்பரத்தின் மீது கை வைக்க கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறது மத்திய அரசு. கொஞ்சம் பிசகினாலும் சிதம்பரம் அந்த ஆயுதத்தை தங்கள் மீது திருப்பிவிட்டு பூமராங் ஆக்கிவிடுவார் என்பது அவர்களுக்குப் புரியும்.

எனவே மிக நுணுக்கமான மேலும் அடர்த்தியான சட்டப் பின்னணிகளுடன் விரைவில் சிதம்பரத்தின் மீது பாய்ந்தே தீருவது எனும் முடிவிலிருக்கிறாராம் மோடி. எல்லாவற்றுக்கும் அந்த ஹார்டு டிஸ்கைத்தான் கடவுளாக நம்பி இருக்கிறார்களாம். 

இதை இப்போதே கணித்துவிட்ட சிவகங்கை சிதம்பர சிறுத்தை, சட்ட ரீதியான பதிலடிக்கு மிகவும் துணிந்து நிற்கிறதாம். ஆனாலும் என்ன செய்யப் போகிறதென்று பார்ப்போம்!