ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் காவல் மேலும் நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிதம்பரம் குடும்பத்தினர் இன்று அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். அதில் சிதம்பரத்திற்கு எதிராக உறுதி செய்யப்படாத, ஆதாரம் இல்லாத தகவல்கள் வெளிவருகின்றன. சிதம்பரத்தின் பெயரை கெடுக்க அரசு விரும்புகிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். சிதம்பரத்திற்கு எதிராக நடக்கும் பொய் பிரசாரம் வருத்தத்தை தருகிறது என தெரிவித்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதிதான் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. இதனை நாங்கள் நம்புகிறோம். சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயன்றாலும் உண்மை ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் பொது வாழ்க்கையில், சிதம்பரத்திற்கு கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது.

போதுமான சொத்துகள் கொண்ட, முறையாக வருமான வரி செலுத்தும் சிறிய குடும்பம் நாங்கள். நாங்கள் அனைவரும் வருமான வரி கட்டி வருகிறோம். பணத்திற்காக நாங்கள் அலையவில்லை. 

நாங்கள் சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாடுகளில் சொத்துகள், பல வங்கிகணக்குகள், போலி நிறுவனங்கள் என எங்களுக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏ்றபடுத்துகின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசிடம் ஆதாரம் காட்டும்படி அரசுக்கு சவால் விடுக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.