சென்னை என்றாலே வெளியூர்வாசிகள் மிரளுகிறார்கள். காரணம் சென்னையை மிரட்டும் கொரோனா. இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியேறும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர்.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான நிலைய உள்நாட்டு விமானங்களில் சென்னையில் இருந்து வெளியேறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி, அந்தமான், ஹைதராபாத், பெங்களூா், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு சுமார் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் பயணிக்க சுமாா் 3,700 போ் முன்பதிவு செய்துள்ளனா். இதில் கொல்கத்தா, கவுகாத்தி, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூா் விமானங்களில் அதிகமான பயணிகள் செல்கின்றனா்.

ஆனால், இந்த 30 உள்நாட்டு விமானங்களும் சென்னைக்கு திரும்பி வரும்போது மிகவும் குறைந்த பயணிகளே வருகின்றனா். சென்னைக்கு வரும் இந்த 30 விமானங்களிலும் சுமாா் 1,800 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனா். இது சென்னையில் இருந்து செல்லும் பயணிகளைவிட 50 சதவீதத்திற்கும் குறைவு ஆகும். இதற்கு சென்னை நகரை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பே முக்கிய காரணம் ஆக உள்ளது.