கிராமத்துப் பக்கம் ஒரு வாக்கியம் உண்டு ‘பெரியவங்க இறந்த வீட்டுல ஒரு நல்ல காரியத்தை நடத்தி பார்த்துடணும்!’அப்படின்னு. அந்த வகையில் ஜெயலலிதாவை ’ரொம்ப பெரிய’ மனுஷியாக நினைப்பதாலோ என்னவோ அவர் இறந்த சில மாதங்களிலேயே தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடத்தை தொடர்ந்தது எடப்பாடியார் அரசு. 

* மக்கள் வரிப்பணத்தை வாரிக்கொட்டி, தேவையற்ற ஆடம்பரத்தில் இந்த விழாவை நடத்துகிறார்கள். 
* எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா மேடையை, தி.மு.க.வை திட்டுவதற்குதான் முதல்வர்களும், அமைச்சர்களும் பயன்படுத்துகிறார்கள். - என்றெல்லாம் கடும் விமர்சனத்தை சம்பாதித்த பிறகும் கூட கவலையே இல்லாமல் நகர்ந்தது இவ்விழா. 

எல்லா மாவட்டங்களும் முடிந்து இன்று கடைசி மாவட்டமாக தலைநகர் சென்னையில் இதன் இறுதி விழா இன்று நடக்கிறது. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை இவ்விழாவுக்கு வாழ்த்துரைக்க அழைத்தும் கூட அவர் அதற்கு நன்றி சொல்லிய கையோடு சேர்த்து, விமர்சனத்தையும் அள்ளிக் கொட்டி மறுத்துவிட்டார். இந்நிலையில் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்னை விழாவை நோக்கி கட்டாயமாக திருப்பிவிடப்பட்டு இருக்கின்றனவாம். 

ஒவ்வொரு மாவட்ட செயலாளரும், அமைச்சரும் தங்கள் கோட்டாவுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அ.தி.மு.க. தொண்டர்களையும், பணம் மற்றும் இத்யாதி விஷயங்களைப் பெற்றுக் கொண்டு வரும் நபர்களையும் ஏற்றிக்கொண்டு வர  உத்தரவிட்டுள்ளார்களாம். இதனால் வழக்கமான வழித்தடங்களில் பேருந்துகள் ஓடாததால், மக்கள் தங்கள் தேவைக்கு பயணம் செய்ய முடியாமல் அவதிப்படுவதாக எதிர்கட்சிகள் வறுத்தெடுக்க துவங்கியுள்ளன.

 

இது அ.தி.மு.க. அரசின் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் காட்டத்தை கிளப்பியிருக்க, பல மாவட்டங்களில் இருந்து இலவசமாய் சென்னை வந்து இறங்கியிருக்கும் அ.தி.மு.க.வினர் சிட்டி டாஸ்மாக்குகளில் கரை வேஷ்டி மற்றும் துண்டுகளோடு குவிந்து, முட்டி மோதி சரக்கு வாங்கி ஊற்றி சந்தோஷித்துக் கொண்டிருப்பது வாட்ஸ் அப்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதுவும் அக்கட்சி, ஆட்சியின் பெயரை தன் பங்குக்கு அசிங்கப்படுத்துகிறது. ’குடிகாரர்களுக்கு இலவசமாய் பஸ் விட்ட எடப்பாடி அரசு’ என்று இணையதளத்தில் கழுவி ஊற்றுகின்றனர்.