chennai high court order to not restriction for edappaadi meeting on tomorrow

நாளை நடைபெறவிருக்கும் பொதுக்குழுவை கூட்ட தடையில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து அக்டோபர் 23 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது. 

எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் இணைந்த பின்னர் நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி அறிவித்தார். 

இதற்கு எதிராக டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்தால் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

இதையடுத்து நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து டிடிவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. 

இரு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. விசாரணை நிறைவுற்ற நிலையில், பொதுக்குழு கூட்ட தடையில்லை எனவும், பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறி அக்டோபர் 23 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.