ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டால் தேர்தல் ஆணையம் அனுமதிக்கலாம் எனவும் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உத்தரவாக பிறப்பிக்க முடியாது
தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வெப் காஸ்டிங் மூலம் நேரலை செய்ய உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், பதட்டம் நிறைந்த தொகுதிகளை அடையாளம் காணும் வகையில் அரசியல் கட்சிகளுடன் கூட்டம் கூட்ட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், வாக்குப்பதிவுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும், 15 ஆண்டுகளுக்கு மேலான வாக்கு பதிவு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் வாக்குப்பதிவுக்கு பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும், ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அனைத்து தொகுதிகளிலும் வெப் காஸ்டிங் செய்வது சாத்தியமில்லை எனவும், தற்போதைய தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுட்காலம், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஆணையத்திடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பதட்டமான வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் இந்த வாரத்தில் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் பதட்டமான வாக்குச் சாவடிகள் என அடையாளம் காணப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது?. தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கப்படுமா?தேர்தலுக்கு பின் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படுமா? என்பது குறித்து மார்ச் 29ம் தேதி பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பதட்டமான வாக்கு சாவடிகளில் வெளி மாநில காவல் துறையினரையும், துணை ராணுவ படையினரையும் அமர்த்த வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டால் தேர்தல் ஆணையம் அனுமதிக்கலாம் எனவும் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உத்தரவாக பிறப்பிக்க முடியாது எனவும் உத்தரவிட்டனர். தேர்தல் நடைமுறைகள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுகிறது என வாக்காளர்கள் திருப்தி அடையும் வகையில் வாக்குச்சாவடி கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல், மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்தல் ஆகியவை குறைக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
