பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தற்போது தமிழகத்தின் மீடியாக்களின் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறிவிட்டார். தினமும் ஒரு சர்ச்சை... எதிர்கட்சிகள், எந்த கட்சி ஆனாலும் சரி ஹெச்.ராஜாவுக்கு எதிராக கருத்துக்களைச் சொல்லாமல் விட்டு விடுவதில்லை. அந்த அளவிற்கு சர்ச்சையின் நாயகனாக மாறிப்போயுள்ளார் இந்த பாஜக செயலாளர். 

கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பங்கேற்ற இவர், காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது உணர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற ஹெச்.ராஜா நீதிமன்றத்தையும், போலீஸ் உயரதிகாரிகளையும், ம... மட்டை என தகாத வார்த்தைகளால் கண்ணாபிண்ணாவென பேசிவிட்டார். உடனிருந்த நல்ல உள்ளங்கள் சும்மா இருப்பார்களா என்ன? செல்போன் கையுமாக திரியும் இவர்கள் அப்படியே இதைப் படம் பிடித்து நெட்டில் உலவ விட்டு விட்டார்கள். 

ஆரம்பித்தது ராஜாவுக்கு சிக்கல்... தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகவும், காவல் துறையினரை அவதூறாக பேசியதாகவும் தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. கண்டிப்பாக ராஜா கைது செய்யப்படுவார் என்ற சூழல் ஒரு மாதத்திற்கு முன்னால் உருவானது. ஆனால், ஹாயாக, எதுவுமே நடக்காதது போல ஜம்மென்று உலவி வருகிறார் ராஜா.

 

நீதிமன்றம் குறித்து ஹெச்.ராஜாவின் அவதூறான பேச்சுக்கு விளக்கம் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றம் ஹெச்.ராஜாவுக்கு நோட்டீஸ் ஒன்றை இன்று அனுப்பியது. காரைக்குடியில் உள்ள அவரது வீட்டு விலாசத்துக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஹெச்.ராஜா காரைக்குடியில் இருந்தும் உயர்நீதிமன்ற நோட்டீசை வாங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். வீடு பூட்டி இருப்பதாக நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக தெரிகிறது. சென்னை உயர்நீதிமன்ற நோட்டீசையே திருப்பி அனுப்பும் ஹெச்.ராஜா உண்மையிலேயே ரொம்பவே தைரியசாலிதான்.