பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலத்திலுள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று துவக்கி வைத்தார். மேலும் ஆணையாளர் அவர்கள் இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அனைத்து பிரிவு மருத்துவ சிகிச்சையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு சிறுநீரக சுத்திகரிப்பு மையம் டயாலிசிஸ் சென்டர் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார் . அதனடிப்படையில் தற்பொழுது பெருங்குடி, நுங்கம்பாக்கம், ரெட்டேரி , வளசரவாக்கம் என நான்கு இடங்களிலும் சிறுநீரக சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு நோயாளிகளின்  பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. 

இதுநாள் வரை நுங்கபாக்கம் மையத்தில் 26,575 நபர்களுக்கும் ரெட்டேரி லட்சுமிபுரம் மையத்தில 8,599  நபர்களுக்கும் டயாலிசிஸ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் திருவெற்றியூர், ஈஞ்சம்பாக்கம், அம்பத்தூர், மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளிலும் மையங்கள் ஓரிரு மாதங்களில் அமைக்கப்பட்டு செயல்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியோடு ரோட்டரி கிளப், தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி பவுண்டேஷன் இணைந்து இந்த பணியை செய்து வருகிறது. வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள இந்த மையத்தில் 12 படுக்கை வசதிகளுடன் சிறுநீரக சுத்திகரிப்பு மையம் தற்போது செயல்படுகிறது. மேலும் முதல்வர் காப்பீட்டு திட்டம் மூலம் இந்த மையத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம், மாநகராட்சி மருத்துவமனைகளில் இன்று தொடங்கப்பட்ட இந்த சிறுநீரக சுத்திகரிப்புமையம் ஐந்தாவது மையமாக விளங்குகிறது. 

பொதுமக்கள் தங்களது சிறுநீரக பாதிப்புக்கு இலவசமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இந்த மையங்கள் இயங்கி வருகிறது, இதுபோன்ற அரசு மருத்துவமனை செயல்பாட்டிற்கு ரோட்டரி கிளப், தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி பவுண்டேஷன் ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுவது மகிழ்ச்சிக்குரியது, மேலும் இது ஒரு ஆரோக்கியமான விஷயமாகும், இது போன்று ஏதேனும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற முன் வருமானால் அதை நானும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்தார்.