Asianet News TamilAsianet News Tamil

ஐயா.. நீங்க சொன்ன மாதிரியே பேனரைலாம் புடுங்கி எறிஞ்சுட்டோம்!! நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பதில்

chennai corporation answer in high court
chennai corporation answer in high court
Author
First Published Mar 5, 2018, 4:00 PM IST


சென்னை முழுவதும் அனுமதியின்றி மற்றும் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சாலைகள், நடைபாதைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கக்கூடாது, சம்மந்தப்பட்ட விழா முடிந்தவுடன் உடனடியாக பேனர்களை அகற்றிவிட வேண்டும் என பேனர்கள் தொடர்பாக பல்வேறு அதிரடியான உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

ஆனால் அவை எதையும் அரசோ, காவல்துறையோ, உள்ளாட்சி நிர்வாகங்களோ முறையாக பின்பற்றுவதாக தெரியவில்லை. இந்நிலையில், பேனர்களுக்கு எதிராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பல்வேறு வழக்குகளை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விசாரித்தார்.

அப்போது, பேனர்கள் தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் காவல்துறை பின்பற்றுவதாக தெரியவில்லை. சென்னை கிரீன்வேஸ் சாலையிலிருந்து உயர்நீதிமன்றம் வரையில் மட்டும்தான் பேனர்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. ஆனால் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்கள் அகற்றப்படுவதில்லை. அவற்றையெல்லாம் காவல்துறை ஏன் அகற்றவில்லை? என மிகக் கடுமையான கோபத்துடன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பினார். மேலும் அனுமதியின்றியும் விதிகளை மீறியும் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்றிவிட்டு இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை முழுதும் அனுமதியின்றியும் விதிகளை மீறியும் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களையும் அகற்றிவிட்டதாகவும் இதுதொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்வதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios