சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக  காட்சியளிக்கிறது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை  முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அதிகாலை 3:00 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை காலை 10 மணி வரை நீடித்தது.  இதனால் சென்னை, அடையாறு, கிண்டி, வேளச்சேரி, தியாகராயநகர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, எழும்பூர், நுங்கம்பாக்கம், மாதாவரம், புழல், செங்குன்றம், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், வேப்பேரி,  உள்ளிட்ட பகுதிகளிலும். தாம்பரம் பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கி உள்ளது. 

இதனால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ரயில்வே மேம்பாலம், சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று காலை சென்னையில் இருள் சூழ்ந்தது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. தொடர் மழை காரணமாக காலை அலுவலகத்திற்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மறுதினமும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு  மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.