திருவண்ணாமலை 

எட்டு வழி பசுமைச் சாலை வேண்டும் என்று யார் கேட்டார்கள்? சென்னை மக்களும் கேட்கவில்லை, சேலம் மக்களும் கேட்கவில்லை என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேலம் - சென்னை இடையே எட்டு வழி பசுமை வழிச் சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தொலைவில் அமைகிறது. இந்த சாலைகாக 1100 எக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி, போளூர் பகுதியில் ராந்தம், பெலாசூர், விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களிலும், அல்லியாளமங்கலம் காப்பு காட்டு பகுதியிலும் பசுமை வழிச் சாலை செல்கிறது.

இந்த நிலையில் பசுமை வழிச் சாலை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் பா.ம.க. சார்பில் போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தில் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கருத்து கேட்டார். இதில் விளாப்பாக்கம், ராந்தம், பெலாசூர், பில்லூர், காம்பட்டு, ஆத்துரை, உலகம்பட்டு உள்பட பல கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில் விவசாயிகள், "நிலத்தை கையகப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் எங்களது மூதாதையர் நிலம் வருமா? 

நிலம் இல்லை என்றால் கூலி வேலைக்கு சென்று எப்படி குடும்பத்தை காப்பாற்றுவது? குழந்தைகளின் கல்விக்கு என்ன செய்வது? 

சாலை வேண்டாம், நிலம் தான் வேண்டும்" என்று கண்ணீர் மல்க பசுமை வழிச் சாலைக்கான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பின்னர் மருத்துவர் அன்புமணி ராம்தாஸ் எம்.பி., "மத்திய, மாநில அரசுகள் மக்கள் கேட்கும் திட்டத்தைதான் கொண்டுவர வேண்டும். 

எட்டு வழி பசுமைச் சாலை வேண்டும் என்று யார் கேட்டார்கள்? சென்னை மக்களும் கேட்கவில்லை, சேலம் மக்களும் கேட்கவில்லை. 

சென்னையில் இருந்து சேலத்திற்கு மூன்று வழியாக சாலைகள் உள்ளன. சென்னை - சேலம் ஊளுந்தூர்பேட்டை வழியாகவும், வாணியம்பாடி வழியாகவும், கிருஷ்ணகிரி வழியாகவும் செல்லலாம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். 

மக்களிடம் சரி, யாரிடமும் கருத்து கேட்பது இல்லை. மக்கள் சொத்தை அபகரிக்கிறது. பசுமையை அழிக்கிறது. 

சென்னை - சேலம் சாலைகளை அகலப்படுத்தினாலே போதும், புதிய பசுமைசாலை தேவையில்லை. 

விவசாயிகளாகிய உங்கள் கருத்துகளை பதிவு செய்து அறிக்கை தயாரித்து மத்திய, மாநில அரசு நெடுஞ்சாலைத் துறையிடம் அளித்து நல்ல தீர்வு கொண்டு வருவேன்" என்று அவர் கூறினார்.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் முன்னாள் எம்.பி. துரை, முன்னாள் எம்.எல்.ஏ. எதிரொலிமணியன், மாவட்ட உழவர் பேரவை தலைவர் எழுமலை, நகர தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.