ஆந்திராவில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைகளை அகற்ற அவரது மகனும், மாநில முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். சட்ட விரோதமாக அரசு நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற ஜெகன்மோகன் உத்தரவிட்டார். அதன்படி, கிருஷ்ணா படுகை மீது கட்டப்பட்டிருக்கும் 'பிரஜா வேதிகா' மக்கள் தர்பார் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி அந்தக் கட்டடமும், அதனருகில் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான 5 கோடி மதிப்பிலான கட்டடமும் இன்று காலை இடிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு 'பிரஜா வேதிகா' கட்டடம் மக்களுக்காக மக்கள் பணத்தில் கட்டப்பட்டது. அது மக்களுக்கு சொந்தமானது. இதனை இடிப்பது தவறு. ஆந்திராவில் ஜெகனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆயிரக்கணக்கான சிலைகள் அனுமதியின்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த சிலைகளை அகற்ற அவர் என்ன நட வடிக்கை எடுக்கப்போகிறார் என பார்க்கலாம்’’ என அவர் தெரிவித்தார்.