மே 23 அன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 200-க்கும் குறைவான சீட்டுகளே கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் கணக்குப் போட்டுள்ளன. எனவே எதிர்க்கட்சிகளை ஒன்றினைத்து மத்தியில் ஆட்சியை அமைக்கும் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இதேபோன்று காங்கிரஸுக்கு ஆதரவாக ஆந்திர முதல்வர் சந்திரபாபுவும் பாஜக அல்லாத ஆட்சி அமைய அணிகளை கட்டமைக்கும் முயற்சிகளை எடுத்துவருகிறார். ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்து சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் முகாமிட்டிருக்கும் சந்திரபாபு தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசிய சந்திரபாபு, பாஜக ஆட்சி அமைவதை தடுக்கும் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்திரபாபு சந்தித்து, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


இன்றைய தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்து பேச உள்ளார். இதன்பின்னர் உத்தரப்பிரதேசம் செல்லும் சந்திரபாபு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

 
தொடர்ச்சியாக தலைவர்களைச் சந்திப்பது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில்,‘‘தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு பாஜகவை எதிர்க்கும் எல்லா கட்சிகளும் இணைந்து ஒரு மகா கூட்டணியை அமைக்க முன் வர வேண்டும் என்று அழைக்கிறேன். தெலங்கானா ராஷ்டிர சமிதி மட்டுமல்ல, இதில் எல்லா எதிர்க்கட்சிகளும் இணைய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 5 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் இந்த நகர்வுகள் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.