ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட ஆந்திர எம்பிக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக கூறி தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. மத்திய அரசு அளித்த வாக்குறுதியின்படி சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆந்திர அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் ஆந்திராவின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிமடுக்காததால், மத்திய அமைச்சரவையிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினர். பாஜகவுடனான கூட்டணிக்கு தெலுங்குதேசம் கட்சி முற்றுப்புள்ளி வைப்பதற்கான முன்னோட்டமாகவே இது பார்க்கப்பட்டது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநிலத்தை சேர்ந்த எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சட்டசபையில் பேசிய சந்திரபாபு நாயுடு, மத்திய அரசின் நிதி.. மாநில அரசின் நிதி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அனைத்துமே மக்கள் பணம் தான். தென் மாநிலங்கள் தான் மத்திய அரசுக்கு பெரும் நிதியை வரி வருவாயாக செலுத்துகிறது. ஆனால், தென் மாநிலங்களிலிருந்து நிதியை பெற்று அவற்றி பெரும்பாலான தொகை, வட மாநிலங்களின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. ஏன் இந்த பாகுபாடு? ஆந்திரா, இந்தியாவின் அங்கம் இல்லையா?எங்கள் நிதியை எடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு கொடுக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு ஏன் தர மறுக்கிறீர்கள்?

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய மத்திய அரசு, அதேபோல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பது ஏன்? மத்திய அரசு அளித்த வாக்குறுதியைத்தானே நிறைவேற்ற கோருகிறோம் என சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

தென் மாநிலங்களின் வரி வருவாயின் பெரும்பகுதியை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பயன்படுத்துவதாக சந்திரபாபு நாயுடு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.