ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமித்ஷா கூறியிருப்பது மிகப் பெரிய பொய் என்றும், பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவது பாஜகவுக்கு கைவந்த கலை என்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்

ஆந்திர மாநிலத்திக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததை கண்டிக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் விலகியது. மேலும் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

இதற்கு பதிலடி கொடக்கும் விதமாக சந்திரபாபு நாயுடுவிற்கு பாஜக . தலைவர் அமித்ஷா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்  மத்தியில் பதவியேற்றதும், 3 ஆண்டுகளில் ஆந்திராவுக்கு  சிறப்பு நிதியாக 1,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், மாநில அரசால் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எஞ்சியுள்ள 88 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தால் கடுப்பான சந்திர பாபு நாயுடு,  ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக கூறிய அமித்ஷாவின் கடிதம் முழுவதும் பொய் மூட்டையாக உள்ளது  குற்றம் சாட்டியுள்ளார். அம்மாநில சட்டப் பேரவையில் பேசிய அவர், பாஜக  தலைவர் அமித்ஷா தனது கடிதத்தில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியதாகவும், அதனை நாங்கள் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஏன் பொய்யை பரப்புகிறீர்கள்? அவரது கடிதம் முழுவதும் பொய் மூட்டையாக உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் பொய் என்றும் நாயுடு குறிப்பிட்டுள்ளார். பொய் முட்டைகளை அவிழ்த்துவிடுவது பாஜகவுக்கு கைவந்த கலை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் நலனுக்காக தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். அரசியல் காரணத்திற்காக கூட்டணியை முறித்ததாக அமித்ஷா கூறியுள்ளார்.

ஆனால் நாங்கள் மக்கள் விருப்பத்திற்காக தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம். நாங்கள் ஒன்றும் ஒரே இரவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடவில்லை என்பதை பாஜகவினர்  உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மிகக் கடுமையாக சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.